வேலணை சரஸ்வதி வித்தியாசாலை

ஆரம்பகாலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களில் பின்வருவோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். பண்டிதர். அ.பொன்னுத்துரை, திரு.ஐ.பொன்னையா, வித்துவான் க.வேந்தனார், திரு.பொ. ஜெகநாதன், திரு.நா.கந்தஞானி, திரு.ஐ.நாகநாதன், பண்டிதர். க.கணபதிப்பிள்ளை, திரு.சு.சீவரெத்தினம், திருமதி.நாகரெத்தினம் பொன்னுத்துரை, திரு.சி. இராசரெத்தினம், திருமதி.ருக்மணி இராசரத்தினம் அவர்களைத் தொடர்ந்து திரு.சோ. கந்தையா, திரு.பொ.தியாகராசா போன்றோர் குறிப்பிடத்தக்க சேவையாற்றி யுள்ளனர். பிற்காலத்திலும் பல நல்லாசிரியர்கள் இப்பாடசாலையில் கடமையாற்றியுள்ளனர். இவர்களில் வெளியூர் ஆசிரியர்களும் அடங்குவர்.
திருமதி. நாகரெத்தினம் பொன்னுத்துரை அவர்கள் நீண்ட காலம் இப்பாடசாலையில் ஆரம்ப வகுப்பாசிரியராக மிகச் சிறந்த சேவையாற்றியுள்ளார். “நாகரத்தினக்கா” என மாணவர்களாலும், பெற்றோர்களாலும் அன்புகலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட
அவ் ஆசிரியை வேலணைக் கிராமத்துப் பிள்ளைகளில் பெரும் பாலானோரின் கல்வியை ஆரம்பித்து வைத்த அறிவுத் தெய்வம் என்றால் மிகையாகாது.
பாடசாலையில் வகுப்பறைக் கல்வி மட்டுமன்றி குருபூசைகள், சமய விழாக்கள், கலைவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு மாணவர்களின் சமச்சீரான ஆளுமை வளர்ச்சிக்கு வழி செய்துகொடுக்கப்படுகின்றது.பாடசாலை மட்டத்திலன்றி கோட்ட வலய, மாவட்ட மட்டப் போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை ஆகியவற்றில் இப்பாடசாலை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.