யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04
சரவணை
வேலணைத்தீவின் 10 கிராமங்களில் சரவணை என்ற கிராமமும் ஒன்றாகும். வீர நாராயணன் படை தளபதி சரவணன் தானை நின்று போரிட்ட இடம் சரவணை என்று வந்தகாக கூறப்படுகின்றது. சரவண பொய்கையில் தவழ்ந்ததால் முருகனை சரவணன் என்று அழைத்து வணங்குவார்கள் அந்த முருக மூர்த்தியை இந்த பிரதேச மக்கள் ஒருகாலத்தில் குல தெய்வமாய் கொண்டு வழிபட்டு இருக்கலாம் அதனாலும் சரவணை என்ற பெயர் வைத்து அழைத்து இருக்கலாம். இன்றும் இங்கு வாழும் மக்கள் முருக வழிபாட்டை சிறப்பாக கொண்டு இருக்கின்றார்கள்.
இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பாரம்பரிய தொழிலாக விவசாயத்தை கொண்டு இருந்தாலும் வியாபாரத்திலும் ஏனைய சிறு தொழில்களிலும் கால் நடை வளர்ப்பிலும் ஈடு பட்டு தங்கள் வாழ்வாதாரத்தையும் செல்வ செழிப்பையும் நிலை நிறுத்தி கொண்டார்கள். வாழ்வியல் மாற்றத்துக்கு கேற்ப தங்களை மேம்படுத்துவதற்காக கல்வி வளர்சியிலும் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் கல்வியிலும் பல்வேறு சாதனைகள் படைத்து சமுதாயத்தில் இந்த கிராம மக்களுக்கு ஒரு தனித்துவமான நிரந்தர இடத்தை நிலை நிறுத்தினார்கள். இவர்கள் கல்வி வளர்சிக்கு நாகேஸ்வரி மகா வித்தியாலயம், சின்னமடு ரோமன் கத்தோலிக்க பாடசாலை போன்றனவும் அண்மைய கிராம பாடசாலைகளும் பெரிதும் உதவியாக இருந்தது. இங்கு வாழ்ந்தவர்கள் தங்கள் பாரம்பரிய கலைகளை கலை விழாக்கள் எடுத்து வளர்த்து வந்ததோடு விளையாட்டு துறைகளிலும் பெரும் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் வைத்து தங்கள் திறமைகளை வெளிகொண்டுவந்தார்கள்.
இங்கு வாழ்ந்த மக்கள் பெரும் பகுதியினர் இந்துக்களாகவும், வாழ்வியல் மாற்றத்தால் கணிசமான அளவு கிறிஸ்தவ மக்களும் இருந்தார்கள். இந்துக்கள் அம்மன் முருகன் காளி, ஐயனார் வைரவர் பிள்ளையார் போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்து சிறப்பாக வழிபட்டு வந்தார்கள். கிறிஸ்தவ மக்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும், அன்னை மரியாள், மாதா கோவில்களுக்கும் சென்று தங்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார்கள். மதங்களால் வேறு பட்டு நின்றாலும் அவர்கள் கலை விழாக்களிலும் கோவில் விழாக்களிலும் ஏனைய பொது நிகழ்வுகளிலும் ஒன்றுபட்டு நின்று ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள்.
வேலணை தீவின் ஒரு சிறு கிராமமாக இருந்தாலும் பல்வேறு சிறப்புக்களுடன் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் யாழ் /20 சரவணை கிழக்கு , யாழ் /21 சரவணை மேற்கு என்ற இரு கிராம சேவகர் பிரிவுகளை கொண்டு சாதாரண வசதிகளுடன் இந்த கிராமம் இயங்கி வருகின்றது. வாழ்வியல் நகர்வில் மாறாத வடுக்களாக மக்கள் மனங்களில் பதிந்துள்ள ஈழபோரினால் பாதிக்க பட்ட கிராமங்களில் சரவணையும் விதி விலக்கல்ல .1990 ,களில் தொடங்கிய இடம் பெயர்வினால் இங்கு வாழ்ந்த மக்கள் பெரும் தொகையினர் உள்நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் என உலகெங்கும் பரந்து வாழும் நிலை ஏற்பட்டது .தமது அன்னை மண்ணை பிரிந்து இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஆத்மாவின் தாகம் தாங்கள் பிறந்து வளர்ந்த புனித பூமியையே எந்த நேரமும் நினைத்துகொண்டு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் ஊர் பற்றும் உறவுகள் மீதான பாசமும் எம்மை சிந்திக்க வைக்கின்றது . .தாங்கள் வாழும் இடங்களில் ஊரவர்கள் கூடி விழாக்கள் கலை நிகழ்வுகள் என ஒன்றுகூடுவதோடு ,தங்கள் கிராமத்தின் எதிர்காலம் கருதி கோவில்கள் பாடசாலைகள் வீதிகள் என பல புனர்நிர்மாண பணிகளுக்கு பெரிதும் உதவி செய்து கொண்டு இருக்கின்றார்கள் .எந்தையும் தாயும் பிறந்த திருநாட்டின் கிராம முற்றத்தில் எல்லோரும் சந்தோசமாய் சிந்தை குளிர சிரித்து விளையாடி எம் முந்தையர் புகழ் பாடும் நாள் மீண்டும் வருமா என்ற ஏக்கத்தோடு காத்து இருக்கும் ஈழ மக்களில் இந்த கிராம மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள் .என்றோ ஒரு நாள் அந்த காலம் கனிந்து வரும் என்ற செய்தியோடு வாழ்வியல் நீரோட்டத்தில் தொடர்ந்து செல்வோம் .
வேலணை தீவின் ஏனைய கிராமங்களினதும் ஏனைய தீவுகளினதும் சரித்திர பின்னணியையும் அவற்றின் சிறப்புக்களையும் வாழ்வியல் மாற்றங்களையும் வரலாற்றின் பாதையில் பயணித்து தொடர்ந்தும்.
நன்றியுடன் சிவமேனகை