யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04
புளியங்கூடல்
புளியங்கூடல் என்று நாம் இன்று அழைக்கும் இந்த கிராமம் வேலணைத்தீவின் ஒரு கிராமம் ஆகும் .ஆதி காலத்தில் இந்த பிரதேசம் பெரு மரங்கள் நிறைந்த ஒரு சோலையாக இருந்ததாகவும் ,அதில் புளியமரங்கள் அதிகமாகவும் நெருக்கமாகவும் இருந்ததாகவும் அத்தோடு, செருத்தி, குருந்து, கொன்றை,நாவல்,வேம்பு போன்ற மரங்கள் இந்த பிரதேசத்தில் நிறைந்து இருந்ததாகவும் வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன. புளிய மரங்கள் நெருடலாக இருந்ததனால் புளியங்கூடல் என்ற காரணப்பெயரை தனதாக்கி கொண்டு இருக்கலாம் என கருதப்படுகின்றது .
இந்த கிராமத்தில் விவசாயத்தை அடிப்படை தொழிலாக கொண்ட மக்கள் குழுமி வாழ்ந்ததால் அவர்களின் விவசாய தேவைக்கு மாரி கால பெரும் போகத்தில் வான மழை நீர் உதவினாலும் மழை வளம் குன்றிய காலங்களிலும் ஏனைய காலங்களிலும் அவர்கள் நீர் தேவைக்கு கிராஞ்சி, குளுவந்தனை ஆகிய குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீர் பெருதும் உதவியாக இருந்து இருக்கிறது .இங்கு வாழ்ந்த மக்கள் வியாபாரத்திலும் சிறந்தவர்களாக விளங்கி இருக்கின்றார்கள் புளியங்கூடல் சந்தி ஒரு பிரசித்தி பெற்ற இடமாக கருதப்படுகின்றது இது வேலணைத்தீவின் ஏனைய கிராம மக்களும் நாளாந்தம் தங்கள் தேவைகளுக்காக ஒன்றுகூடும் வியாபார தளமாக கருதப்படுகின்றது.
இந்த கிராம மாணவர்களின் கல்வி வளர்சியில் நடராஜா வித்தியாலயம் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது. இந்த பாடசாலையை நடராஜா வாத்தியார் என்பவர் ஆரம்பித்து வழி நடத்திவந்ததால் அந்த பெயருடன் இன்றும் தனது கல்வி சேவையை தொடர்கின்றது. வேலணை தீவின் ஏனைய கிராமங்களில் அன்னியர் வருகைக்கு பின்னர் ஏனைய மதங்களின் தாக்கம் இருந்தாலும் இந்த புளியங்கூடல் கிராமம் அந்த தாக்கத்துக்கு பெரும்பாலும் உள்ளாகவில்லை என்பதை அங்குள்ள ஆலயங்கள் சான்று கூறுகின்றன, இங்கு வாழ்ந்த மக்கள் அம்மனை குலதெய்வமாக கொண்டவர்களாகவும், பிள்ளையார் முருகன் முனியப்பர் வீரபத்திரர், ஐயனார் ஆகிய தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றார்கள். புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவில் ஒரு தலச்சிறப்பு மிக்க ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய விழாக்களின் போதும் ஏனைய ஆண்டு விழாக்களின் போதும் இந்த ஊர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றுவதில் வல்லவர்கள், கூத்துகளாகவும் நாடகங்களாகவும் புராண வரலாறுகளை மக்களுக்கு சொல்வதில் இந்த கிராம முன்னோர்கள் கடந்த காலங்களில் ஆற்றிய பங்கு தமிழ் கூறும் நல்லுலகத்தின் பாராட்டுக்கு உரியது. விளையாட்டு நிகழ்வுகளிலும் தங்கள் வீர சாகசங்களை நிலை நாட்டி காட்டுவதற்கு இவர்கள் என்றுமே பின் நிற்காதவர்கள். இங்குள்ள புதுவெளி மைதானத்தில் ஆண்டுதோறும் மாட்டு வண்டில் சவாரி, சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், வினோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம் போன்ற விளையாட்டுகளை பல காலமாக நடத்தி வந்தார்கள். பிற்காலத்தில் ஏனைய நவீன விளையாட்டு போட்டிகளையும் நடத்தினார்கள். இவ்வாறாக எந்த துறையிலும் பின்னிற்காத வேலணைத்தீவின் இந்த சிறு கிராமம் சாதாரண வசதிக்களுடன், ஊர்காவல்துறை தொகுதியில் யாழ் /60 என்ற ஒரு கிராம சேவகர் பிரிவைகொண்டே இயங்கி வருகின்றது.
போர்த்தந்த வேதனையான சம்பவங்களால் இந்த கிராம மக்களும் சோதனைகளுக்கு உள்ளாகி இடம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழ வேண்டிய நிலை 1990 களில் ஏற்பட்டது ,கால ஓட்டத்தில் உலகெங்கும் பரந்து வாழும் இந்த இராம மக்களும் தங்கள் தனித்துவமான கலை கலாசார விழுமியங்களோடு சகல துறைகளிலும் தங்கள் வாழ்வை மேம்படுத்தி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். பிரதேசம் தாண்டி தேசம் தாண்டி இந்த மக்கள் வாழ்ந்தாலும் தாய் மண்ணில் தாகம் கொண்ட மக்களாய் தங்கள் ஊருக்கும் உறவுக்களுக்கும் உதவி தங்கள் கிராமத்தை புதுமை அடைய செய்துவருகின்றார்கள், வாழ்வியல் நீரோட்டத்தில் மறுபடியும் தங்கள் தாய் நிலத்தில் தங்கள் உறவுகளோடு கூடிவாழவேண்டும் என்ற கனவு ஒவ்வொரு புளியங்கூடல் உறவுகளுக்கும் என்றும் இருந்துகொண்டே இருக்கிறது.