வேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்
புதிய தோற்றத்தோடு சாஸ்திர விதிகளுக்கும், ஆலய விதிகளுக்கும் அமைய மூன்று தளக் கட்டுமானப் பணிகள் கட்டுமான ஸ்தபதி அராலியூர் அ.மார்க்கண்டு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறியது. இக்கட்டுமானம் நிலைகள், நிலைதாங்கி வெள்ளைக் கற்களால் அமைக்கப்பெற்றது. மேலும் திருவுருவச் சிலைகள் தென்னிந்திய நாகலிங்க ஸ்தபதி அவர்களின் யோசனைப்படி அவரின் மாணாக்கர் திரு. சிவக்கொழுந்து அவர்களால் அமைக்கப்பட்டு வந்தவேளை அவர் இறையடி சேர, காவலூர் ஸ்தபதி பத்மநாதன் அவர்களால் நிறைவு பெற்றுள்ளது.
1988ஆம் ஆண்டு சுவாமி தேர் மண்டபத்தில் தேர் ஏறுவதற்கான ஏறு, இறங்கு கட்டுமானப் பணிகள் தேர்த் திருவிழா உபயகாரர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்த்தக்குளம் கட்டுமானப் பணிகள் 1990 ஆம் ஆண்டு நிறைவெய்தின. இக்காலப் பகுதியில் 1990 இல் இப் பிரதேசத்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பிரதேச மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற இவ்வாலயத்தில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இறையருளால் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உயிர்கள் காப்பாற்றப்பட்டதோடு தொடர் இராணுவ நடவடிக்கைகளால் இப்பிரதேச மக்களும் அகதிகளாக சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. இதன் காரணமாக மக்கள் யா ப்பாணத்தின் பல
பிரதேசங்களுக்கும் இடம் பெயர அறங்காவலர் குடும்பமும் இடம்பெயர வேண்டியேற்பட்டது. இதனால் ஆலயத்தில் பல சொத்துக்களைக் கைவிட்ட நிலையிலேயே வெளியேறியிருந்தார். இப்பொருட்கள் பின்னர் காணாமற் போயுள்ளன.
இவ்விடப்பெயர்வைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் மக்கள் எவருமே இல்லாத நிலையில் ஒரு தசாப்த காலம் ஆலயம் பராமரிப்பு அற்ற நிலையில் காணப்பட்டது. மீண்டும் 2000ஆம் ஆண்டளவில் மக்கள் படிப்படியாக தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியேறத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் நித்திய பூசைகள் அங்கிருந்த மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. அக்காலப் பகுதியில் ஆலய அறங்காவலர் திரு. வேலாயுதபிள்ளை அவர்களும் மீள ஆலய இருப்பிடத்திற்குக் குடியேறி மீண்டும் ஆலய பரிபாலன நடவடிக்கைகளைப் பொறுப்பேற்று ஆலயப் புனரமைப்பு வேலைகளைப் பூர்த்தி செய்ய மிகக் கடுமையாக உழைத்தார். அடியார்கள், அயலவர்கள், உபயகாரர்கள் எனப் பலரிடமும் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் ஆலய கும்பாபிஷேகத்திற்காக நிதி திரட்டப்பட்டு அந்நிதி உதவியுடன் குறுகிய காலத்தில் பூந்தோட்டம், கிணறு என்பன புதிதாக அமைக்கப்பட்டதுடன் ஆலயம் முற்றாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவற்றப்பட்டு2001 – 09 – 05 ஆம் திகதி எம் பெருமானுக்கு காவலூர் சிவ ஸ்ரீ நாகலிங்கக் குருக்கள், யோகேஸ்வரக் குருக்கள் அவர்களின் தலைமையில் சிவாச்சாரியார்கள் குழு மகாகும்பாபிஷேகப் பெருவிழாவைச் சிறப்பாக நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் கிரமமாக நடைபெற்று வருகின்றன.