வேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்
1970 களில் திரு. வேலாயுதபிள்ளை ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து அவரது வாழ்க்கை ஆலயத்துடன் ஒன்றித்த அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையாகவே அமைந்தது. ஸ்ரீ சித்தி விநாயகரும் தம் பணிக்காகவே அவரைத் தோற்றுவித்தமைபோல் தன் பணியினை செய்வித்து முடித்துள்ளார் என்றே கூற வேண்டும். இவர் பரிபாலனத்தைக்’ கையேற்ற காலத்தில் ஆவணிச் சதுர்த்தியை அயலவர்கள், உபயகாரர்கள் ஒன்று கூடி பெரிய திருவிழாவாக நடாத்தி வந்தனர். திரு. வேலாயுதபிள்ளை அவர்கள் ஆவணிச் சதுர்த்தியை 2 ஆம் திருவிழாவாகக் கொண்டு 10 நாட்கள் அலங்கார உற்சவத் திருவிழாக்கள் நிகழ்த்தத் திட்டமிட திருவருள் கைகூடிற்று.
1970 ஆம் ஆண்டிலிருந்து 10 நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறத் தொடங்கிற்று. ஆலயச் சூழலில் வாழ்ந்தவர்களைத் தனித்தும், குழுக் களாகவும் உபயகாரர்களாகத் (யாப்பிலுள்ளதற்கமைய) தெரிந்தெடுத்து அவர்களிடம் விழாக்கள் ஒப்படைக்கப்பட்டு, வருடாவருடம் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. அவ்வேளை திருவிழா சிறப்புற அமையத் தேவையான மண்டப வசதியின்மையால் தற்காலிக கிடுகுக் கொட்டகைகள் தேவையைப் பூர்த்திசெய்தமை கண்டு திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் மண்டபம் அமைக்கும் பணியில் சிறிது சிறிதாக ஈடுபடத் தொடங்கினார்.