வேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்
இவரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடர்வதற்காக தனது மகன் நம்பாப்பிள்ளை என்பவருக்கு 1946 இல் ஆலயப் பரிபாலனத்தை தத்துவ சாதனம் செய்து யாப்பு ஒன்றை உருவாக்கியதாகவும் அறியப்படுகின்றது. இக்காலப் பகுதிகளில் நான் இவ்வாலயச் சூழலில் வாழ்ந்த முத்து மணிய காரணி என்பவரால் இவ்வாலயத்திற்கு “ஆர வயல் மேட்டு காணி ” (40) நிலப்பரப்பு தர்ம சாசனம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை விட இவ்வாலயத்திற்கு வேலணையில் புளிப்பத்தை என்ற இடத்தில் (10) நெற்பரப்புக் காணியும், கெம்மில் குடியிருப்பில் (45) நெற்பரப்புக் காணியும், போக்கணவந்தோட்டம் (10) பரப்புக்காணியும், பனிக்க சாட்டியில் (33) நிலப்பரப்புக் காணியும் பனைகளுடன் இவ்வாலயத்திற்கு உரித்துடைய அசையா சொத்துக்களாக உள்ளன என்பது அறியப்படுகின்றது.
திரு. கார்த்திகேசு அவர்கள் 1947 இல் இறையடி சேர, ஆலய பரிபாலனம் திரு. தம்பாப்பிள்ளை அவர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. இவரது காலத்தில்
மணிக்கோபுரம் அமைக்கப்பட்டு ஆலய மணியோசை திக்கெட்டும் கேட்க வழிசெய்யப்பட்டது. இவரால், வேலணை வடக்கு ஐயனார் கோவில் குருக்களான கணபதிக் குருக்கள் அவர்கள் இவ்வாலய நித்திய, நைமித்திய பூசைகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார். இக்குருக்களது காலத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்ததோடு விசேட தினங்களில் குறிப்பாகச் சித்திரா பெளர்ணமி, ஆவணிச் சதுர்த்தி, பிள்ளையார் பெருங்கதைக் காலங்களில் நைமித்திய பூசைகள் சிறப்பாக நடைபெற்றன. ஆலயச் சூழலில் வாழ்ந்தவர்கள் நோன்பிருந்து விநாயகப்பெருமானைப் பயபக்தியோடு வழிபட்டு வந்தமை கண்டு சிறுவர்களும் ஆலய வழிபாடுகளில் ஈடுபாட்டோடு கலந்து வாழ்ந்து வரலாயினர்.
திரு. தம்பாபிள்ளை அவர்கள் தனது ஆலய பரிபாலனத்தை 1970 ஆம் ஆண்டில் தனது மகனும் தற்போதைய ஆலய தர்மகர்த்தாவுமான திரு. வேலாயுத பிள்ளை (7ஆம் தலைமுறை) அவர்களிடம் கையளித்தார். இவர் இவ்வாலயத்தைப் பரிபாலித்த காலம் ஆலய வரலாற்றில் ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இவரது காலப் பகுதியில் தான் ஆலயம் சகல விதத்திலும் மிக வேகமாக வளர்ச்சி கண்டு, தீவுப் பகுதியிலேயே ஒரு பிரமாண்டமான ஆலயம் என்ற தனிப் பெருமையுடன் திகழ்கின்றதெனலாம்.