வேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்
வேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (29 ஏப்ரல் 2018) ஸ்காபரோவில் அமைந்துள்ள New Kingdom Banquet Hall-இல் வெகுசிறப்பாக நடந்தேறியது.
மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகிய பொதுக்கூட்டத்தின் நிகழ்வுகளைத் திரு. இலங்கேஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார். முதல் நிகழ்வாக தாயக மண்ணிற்காகத் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களை மனதில் நிறுத்தி அவர்களுக்காக ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன. முதலாவது ஈகைச்சுடரினை திரு. கங்கேஸ் அவர்கள் ஏற்றிவைக்க அவரைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வருகைதந்திருந்த வேலணையைச் சேர்ந்த அனைத்து உறவுகளும் ஈகைச்சுடரேற்றித் தம் அஞ்சலிகளைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து தாயகத்தில் போரினால் உயிர்நீத்த அனைவருக்காகவும் இருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்த நிகழ்வாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்கடுத்ததாக இடம்பெற்ற வரவேற்புரையினைத் திருமதி. வசந்தி அவர்கள் நிகழ்த்தினார். அதன்பின்னர் வேலணை மக்கள் ஒன்றியத்தின் கடந்தவருட செயற்பாட்டு அறிக்கையினையும் அது சம்பந்தமான பதிவுகளினையும் திரு.திருமாறன் அவர்கள் விளக்கமாக விபரித்தார். வேலணை மக்கள் ஒன்றியத்தின் கடந்தவருட செயற்பாடுகள் வருகைதந்திருந்தோரிடையே பெரும் வரவேற்பைப்பெற்றன. பலரும் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தினையும் உடனேயே வெளிப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து திரு. பாலா அவர்களால் வேலணை மக்கள் ஒன்றியத்தின் வரலாறும், அதற்கான தேவைகளும்பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது. வேலணை மக்கள் ஒன்றியத்தின் அவசியமும் அதன் வளர்ச்சியின் தேவையினையும் சபையோரும் எடுத்துரைத்தனர். அதன்பின்னர் அண்மையில் வேலணை சென்று அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்துவந்த திரு. சுகந்தன் அவர்கள் வேலணையில் மேற்கொள்ளப்படவேண்டிய குறுகியகால மற்றும் நீண்டகால செயற்பாடுகள்பற்றியும் அவற்றிற்கான தேவைகள் பற்றியும் எடுத்துரைத்தார். அதுமட்டுமன்றி தாயகத்தில் வேலணை மக்கள் ஒன்றியம், சிறந்த ஆலோசகர்களின் சரியான வழிநடத்தலில் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கே, தன் சேவைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் இதுவரைகாலமும் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தூண்களாகச் செயற்பட்டுவரும் தன்னார்வலர்கள் சபையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அதையடுத்து கேள்விபதில்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. சபையோரின் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய பதில்கள் வழங்கப்பட்டதன் பின்னர், புதிதாக ஐந்து பிரதிநிதிகள் திரு.பாலா, திரு.உருத்திரன், திரு.வில்வன், திரு.தயா மற்றும் திரு.அன்பன் சபையிலிருந்து இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
தொடர்ந்து ஆர்வத்துடன் உரையாடிய சபையினர், வேலணை மக்கள் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் தாங்களும் பங்கேற்பதாகவும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இனிதே வெற்றிகரமாக நிறைவேறியது.