Sitpanai Murugan -சிற்பனை முருகன் ஆலயம்
ஆலயமும் அதன் அமைப்புவிதிகளும்
சூரபத்மனைச் சங்காரம் செய்தவேல் ஆகாய கங்கையில் நீராடிக் கந்தனை வந்தணைந்த இடம் வேலணை என்பது ஐதீகம். இவ்வேலணையின் மேற்பால் மத்தியில் அமைந்த கோவிலே சிற்பனை முருகன் ஆலயமாகும். இவ்வாலயம் ஏறத்தாழ நூற்றைம்பது வருடங்களின் முன் கந்த உடையார் என்ற சைவ பக்தரின் பூசை மடமாக இருந்ததாகக் கூறுவர். இம்மடத்தில் கந்தஉடையாரால் தாபனம் செய்து வணங்கப்பட்ட வேல், பின்னர் வேல் கோவிலாகி இன்று சிற்பனை முருகன் ஆலயமாக விளங்குகின்றது. கந்த உடையார் தமக் குப் பின இக்கோவிலை நிருவகிக்கும் பொறுப்பை அவரது அபிமானியாகிய விக்கல் விதானை என எல்லோராலும் அழைக்கப் பட்ட சுப்பிரமணிய விதானையிடம் விட்டுச் சென்றார். சுப்பிரமணிய விதானையார் அதிகார தோரணை கொண்டவர்;
சைவசமயப்பற்று மிக்கூரப் பெற்றவர். இவர் அச்சக வசதிகள் அற்ற அக்காலத்தில் நான்கு தடவைகள் கந்தபுராணத்தை தம் கையெழுத் தில் பிரதி செய்ததால் கந்தபுராணத்தை மனனம் செய்தவராகக் கொள்ளப்பட்டார். இவரின் உந்துதல் காரணமாகவே அண்மைக்காலம் வரை எம் ஆலயம் கந்தபுராணம் படித்து பரப்படும் ஆலயமாகத் திகழ்ந்ததோடு சைவத் தமிழ் அறிஞர்கள் தம் கந்தபுராண அறிவுத் திறனை மோதவிடும் களமாகவும் இவ்வாலயம் இருந்து வந்துள்ளது. சுப்பிரமணிய விதானையார் தமக்குப் பின் தம்மிடம் மிக ஈடுபாடுற்ற திரு. வைத்திய நாதர் செல்லையாவிடம் ஆலயப் பொறுப்பை விட்டுச் சென்றார்.
திரு. வை. செ. அவர்களிடம் இருந்த ஆலய நிருவாகப் பொறுப்பு சிறிது காலத்திற்கு பிடியரிசித் தொண்டுமூலம் ஆலய திருப்பணி செய்து வந்த பிள்ளைச் சாமி என யாவர்க்கும் அறிமுகமான திருமதி. கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை அவர்களுக்கும், திரு. துரையப்பா பொன்னம்பலம் அவர்களுக்கும் கைமாறி மீண்டும் திரு. வை. செ. அவர்களிடம் வந்து சேர்ந்தது. திரு. வை. செ. அவர்களின் மறைவின்பின் அவரது தனயனும் பரிபாலன பையின் ஆயுட்கால தலைவருமான திரு. வை. செ. சோமாஸ்கந்தன் அவர்கள் ஆலய நிருவாக பொறுப்பைப் பெற்றார். இவரது நிருவாக காலத்தின் பிற்பகுதியில் இன்றைய பரிபாலன சபையின் மூத்த காப்பாளராகிய திரு. வா. அருணகிரி – சமாதான நீதவான் அவர்கள், ஆலய நிருவாக சபையில் பெரும் பங்கு கொண்டு உதவினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.