வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
இவ்வித்தியாசாலையின் வரலாற்றிலே முதன் முதலிலே 1979 ஆம் ஆண்டு அதிபர் தலைமையில் மாணவர்களும், ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலா ஒன்று மேற்கொண்டு – கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டு பயன் பெற்றனர். அவ் ஆண்டிலேயே முதன் முதலில் துணிவினைச்சங்கம் அமைக்கப்பெற்று ஆசிரியரும், மாணவர்களும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரிய பயனைப் பெற்றனர். 1980 ஆம் ஆண்டு மாணவர் பாராளுமன்றம் அமைக்கப் பெற்று மாணவர்கள் பாடசாலை கருமங்களை தமது பொறுப்பில் நிறைவேற்றினர். 1980 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா மலர் ஒன்றினையும் வெளியிட்டதுடன் வெகு விமரிசையாக விழாவும் கொண்டாடப் பட்டது. அவ்வாண்டு மின்னிணைப்பு வசதியும் செய்யப்பட்டது.
பெற்றார் ஆசிரியர் சங்கமும்,பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பாடசாலை வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவின. நன்னீர் தேக்கி வைத்து மாணவர்கள் அருந்துவதற்கு தண்ணீர்த் தாங்கி ஒன்று 1978 இல் கட்டப்பட்டது.
இப்பாடசாலையில் 85, 89 காலப் பகுதியில் கல்வியையும், சமயத்தையம் ஒன்றாக இணைத்து மாணவர்களது ஆக்கங்களை வெளிக் கொணரும் சேவையில் ஈடுபட்டவர் திரு. வரதலிங்கம் அவர்கள். இவரது காலத்தில் ஆசிரியரது எண்ணிக்கையும், மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்பட்டது. 1989, 1991 காலப்பகுதியிலே அரசியல் ரீதியாக ஏற்பட்ட நாட்டு நிலைமை காரணமாக தீவககல்வியிலே பெரும்பாதிப்பு ஏற்பட்டது. 1990 – 08 – 24 ஆம் திகதி தீவகமக்கள் அனைவரும் தம் உடைமைகளுடன் தீவகத்தை விட்டு வெளியேறிய வேளையில் சைவப்பிரகாச வித்தியாலயமும் (ஆசிரியர், மாணவர்கள் ) இடம் பெயர்ந்தது. இக்காலப்பகுதியிலே திரு. சு. கலாதரன் அதிபராக கடமையாற்றினார். பாடசாலையில் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு வித்தியாலயத்தை இடப்பெயற்சியின் போது மிகக் கஷ்ட நிலையில் வழி நடத்தினார். மீண்டும் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக 08-10-91 இல் இடம்பெயர்ந்து சென்றனர். அத்துடன் ஆசிரியர்களும், மாணவர்களும் பல திக்குகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இடம் பெயர்ந்த காலத்தில் அதாவது 1991 -2002 வரை மாணவர்களைப் பிரிந்த நிலையிலும் ஆசிரியர்களைப் பிரிந்த நிலையிலும் வித்தியாலயத்தின் தனித்துவத்தைப் பேணும் பொருட்டு இளமையும் செயற்றிறனும், நிர்வாக ஆற்றலும் கொண்ட திரு. பொ. அருணகிரிநாதன் அதிபராக பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
1991-10-18 இல் வேலணையில் இடம் பெற்ற மக்கள் புலம்பெயர்வோடு பாடசாலைகளும் புலம் பெயர்ந்தன. வேலணைக் கொத்தணிப் பாடசாலைகள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் மாலைநேரப் பாடசாலைகளாக இயங்கின. சைவப்பிரகாசமும் இதில் இணைந்து இயங்கியது. தனித்துவமாகப் பாடசாலையை இயக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கொத்தணிப் பாடசாலைகளில் சைவப்பிரகாசம் 1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பட்டப்படிப்புக்கள் கல்லூரியில் காலைநேரப் பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் 430 மாணவர்களுடன் தன்னை தக்க வைத்துக்கொண்டு தனது பணியை முன்னெடுத்தது.