வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
கட்டட வளர்ச்சி :
1884 இல் அமைக்கப் பெற்ற ஓலைக்கூரை சாந்துக்கட்டு கற்றுண் காலத்துக்குக் காலம் திருத்தம் செய்யப்பெற்று வந்தது. இடையில் 1945 ஆம் ஆண்டில் வேலணை மத்திய கல்லூரி எனும் ஆங்கிலக் கல்லுரிக்கு இடந்தருவான் வேண்டி சைவப்பிரகாச வித்தியாசாலை சில காலம் ஒரு வீட்டில் நடைபெற்றது. வேலணை மத்திய கல்லூரிக்குரிய தற்காலிகக் கொட்டகை போடப்பட்டவுடன் மீண்டும் சைவப்பிரகாச வித்தியாசாலை தன் பழைய கட்டடத்துள் நுழைந்து கொண்டது. 1946 ஆம் ஆண்டில் கந்தப்பிள்ளை அவர்களால் அமைக்கப்பெற்ற மடம் நீக்கப்பெற்று அதனிடத்தில் 40 x 20 கொண்ட கட்டிடம் அறையுடன் கூடியதாக அமைக்கப்பெற்றது. இக் கட்டிடத் திலும் தற்காலிகக் கொட்டகையிலும் வேலணை மத்திய கல்லூரி இயங்கியது. பின்னர் அதற்கெனக்கட்டிடம் அயலிலே நிறுவப்பெற்ற பின் கல்லூரி அங்கு செல்லவே தற்காலிகக் கொட்டகையும் அகற்றப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி அமைவதற்கு இடம் கொடுத்து அது வளரத் தான் ஒதுங்கியிருந்து அதனை உயர்வடையச் செய்த பெருமை சைவப்பிரகாசத்திற்கு உண்டு.
திரு. மு. மயில்வாகனம் அவர்கள் முகாமையாளராகவிருந்த காலத்தில் பழைய கட்டிடத்தை நீக்கி புதிய 70 x 20 கட்டடம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப் பெற்று பெற்றார் ஆசிரியர்சங்க முயற்சியுடன் 1959 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. அரசாங்க சுவீகரிப்பின் காரணமாக அவ் வேலை பினனர் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்டது. 1974 ஆம் ஆண்டு பெற்றார் ஆசிரியர் சங்கம் பொதுமக்கள் உதவியோடு 40 x 20 கட்டடம் ஒன்றமைத்தது. 1978 இல் 60 x 20 கட்டடம் விஞ்ஞான அறையாகவும் 1979 இல் 40 x 20 கட்டடம் ஒன்றும் அரசினர் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிபர்கள் ஆசிரியர்கள்
சைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பித்த காலத்தே இவ்வித்தியாசாலையில் கற்பித்து வந்த பெரியார்கள் பலர். எனினும் அவர்களுள் ஞாபகத்தில் இருத்தக் கூடியவர்கள் ஸ்ரீமான் வி. கந்தப்பிள்ளை, திரு. க. நமசிவாயப்பிள்ளை, திரு. செ. கனகசபாபதி, திரு. ம. தம்பு, திரு. ச. திருஞானசம்பந்தப்பிள்ளை, திரு. ச.சொக்கலிங்கம் பிள்ளை, திரு. க. தில்லையம்பலம், திரு. செ. பொன்னப்பா ஆகியோராவர். ஆரம்ப காலத்தில் அதிபராக இருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பொலிகண்டி திரு. சி. கந்தவனம், புங்குடுதீவு திரு. நீ. சேதுபதி, நயினாதீவு திரு. எஸ். என். கந்தையா, திரு. எஸ். சின்னத்துரை என்பவர்களாவர்.