வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
வேலணை மேற்கில் “நெல்லாவில்” என்ற பெயர் கொண்ட குறிச்சியே இராஜா உபாத் தியாயரின் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் விளங்கியது. இங்கு குருபூசை மடங்கள், சிவபூசை செய்யும் மடங்கள் அமைந்திருந்தன. இராஜா உபாத் தியாயரின வழிகாட்டலில் அனைவருக்கும் கல்வி முதல் அனைத்து நிலைகளிலும் எல்லோருக்கும் வழிகாட்டப்பட்டது.
நடராஜா வித்தியாலயம் இராஜா உபாத்தியாயருடைய காணியிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒலையால் வேயப்பட்ட சுண்ணாம்புக் கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் ஆசிரியரும், முதல் தலைமை யாசிரியருமாக இராஜா உபாத்தியாயரே விளங்கினார். ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி இன்றும் ஊரில் வாழும் முதியவர்கள் இராஜா உபாத்தியாயர் பள்ளிக்கூடம் என்றே அழைப்பார்கள்.
இப்பாடசாலை சிதம்பரம் நடராஜப் பெருமானின் பெயரைக் கொண்டதாக விளங் கியது. சிதம்பரத்திற்கும் , நெல்லாவிலில் வாழ்ந்தவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் நிலவி வந்தன. சைவம் வளர “சைவ மார்க்க போதினி” யாழ்ப்பாணத்தின் முதல் சைவப்பத்திரிகை, இராஜா உபாத்தியாயரால் அவரது சொந்த ‘நடராஜா அச்சு யந்திர சாலையில்” அச்சிட்டு வெளியிடப்பட்டது. இவருக்கு அப்பாத்துரை உபாத்தியாயர், செல்வி. செளந்தரநாயகி தம்பு ஆசிரியை ஆகியோர் உதவியாக அச்சுப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
நடராஜா வித்தியாலயத்தில் ஆரம்பத்தில் ஆரம்ப வகுப்புகளும், பின்னர் க. பொ. த (சா/த) வரை வகுப்புக்களும் நடை பெற்றன. இங்கு புராணபடனம், குருபூசைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பாத்துரை உபாத்தியாயர் அவர்கள் சமயபாட வகுப்புக்களை இலவசமாக நடாத்தி வந்தார். இதனால் மாணவர்கள் பலர் பயன் பெற்றனர். நவராத்திரி நாட்களில் மாணவர்கள் குழுக்களாக இணைந்து வீடுகளுக்குச் சென்று பாடல்களைப் பாடி சமய வாழ்க்கை வாழ்ந்தனர்.