தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
5.2 தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபெறுகள்
வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு நிதியுதவி அளிப்பதையும் கிராமப் புற சிறுவர்களுக்கு நல்ல பாடசாலைகளில் அனுமதியளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இன்று இவை தேவையற்ற பிள்ளைகளும் தோற்றுகின்றனர். இப்பரீட்சையில் தமது பிள்ளைகள் சித்தியடைவதை பெற்றோரின் தமது கௌரமாகக் கருதும் நிலை முழு இலங்கையிலும் காணப்படகின்றது.
இந்த நிலையில் தீவக கல்வி வலயத்திலுள்ள 54 பாடசாலைகளில் இருந்து 2014 ஆம் ஆண்டும் 56 பாடசாலைகளிலிருந்து 2015 ஆம் ஆண்டும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றினர். இந்த ஆண்டுகளில் பரீட்சைக்குத் தோற்றிய மற்றும் சித்தியடைந்த மாணவர் விபரம் கீழுள்ள அட்டவணை 2 இல் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 3 தீவக கல்வி வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்
விபரம் | 2014 | 2015 |
---|---|---|
தோற்றியோர் | 728 | 711 |
சித்தியடைந்தோர் | 59 | 36 |
சித்தியடைந்தோர் சதவீதம் | 8 | 5 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
மேலுள்ள அட்டவணையின்படி தீவகக் கல்விக் கோட்டத்திலுருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரின் சதவீதமானது பத்திலும் குறைவாக உள்ளனர். மேலும் சித்தியடைந்தோர் சதவீதமானது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015 ஆம் ஆண்டில் 3 சதவீதத்தினால்; வீழ்ச்சியடைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. இந்த வீழ்ச்சிக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்படல் அவசியமானதாகும்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் 54 பாடசாலைகளில் இருந்து 728 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றினர் என முன்பு பார்த்தோம். இந்த 54 பாடசாலைகளில் 25 பாடசாலைகளில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் ஒருவருமே சித்திடையவில்லை என்பது கவனத்தில் எடுக்த்தக்கது. இவ்வாறே 2015 ஆம் ஆண்டு தீவகத்திலுள்ள 56 பாடசாலைகளில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய 711 மாணவருள் 39 பாடசாலைகளில் இருந்து தோற்றிய மாணவருள் ஒருவருமே இப்பரீட்சையில் சித்தியடையவில்லை.
இவ்விபரங்கள் தீவகப் பிரதேசத்தில் ஆரம்பக் கல்வியின் நிலை மோசமடைந்திருப்பதை எடுத்துரைக்கின்றது எனலாம்.
5.3 க.பொ.த. (சா. த) பரீட்சைப் பெறுபேறுகள்
தீவகக் கல்வி வலயத்தில் உள்ள 30 பாடசாலைகளில் க.பொ.த. (சா. த) வகுப்புக்கள் உள்ளன. இவற்றிலிருந்து 2014 ஆம் ஆண்டில் 570 பேரும் 2015 ஆம் ஆண்டில் 712 இப்பரீட்சையில் ஆறும் அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.
அட்டவணை 4 தீவகக் கல்விக் கோட்ட க.பொ.த. (சா.த.) பெறுபேறுகள்
மாணவர் பெறுபேறு | 2014 | 2015 | |
தோற்றியோர் | 570 | 712 | |
உயர்தரம் கற்கத் தகுதி பெற்றோர் சித்தியடைந்தோர் | எண்ணிக்கை | 195 | 242 |
சதவீதம் | 34 | 34 | |
உயர் தரத்தில் கணித எண்ணிக்கை விஞ்ஞான பாடங்கள் கற்கத் சதவீதம் தகுதி பெற்றோர்/சித்தியடைந்தோர் | எண்ணிக்கை | 85 | 159 |
சதவீதம் | 15 | 22 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
தீவகத்திலிருந்து க.பொ.த. (சா. த) பரீட்சைக்குத் தோற்றியோரில் கடந்த இரு ஆண்டுகளிலும் தலா 34 சதவீதமானோரே க.பொ.த. (உ.த.) கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதாவது இப்பரீட்சைக்குத் தோற்றிய மூவரில் ஒருவரே சித்தியடைந்துள்ளார். இது தீவகக் கல்வி வலயத்தில் தற்போது காணப்படும் மிக தீவிரமாகக் கீழடைந்துள்ள கல்வி நிலையைச் சுட்டிக்காட்டுகின்றது. 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் தீவகத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோன்றியோரின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ள போதிலும் இவ்விரு ஆண்டுகளிலும் க.பொ.த. (உ.த.) கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் சதவீதமானது சமனான பெறுமானத்தையே காட்டுவது அவதானிக்கத்தக்கது. அதாவது மாணவர் பெறுபேறானது உயர்வடையாமல் சமனான அளவிலேயே உள்ளது.
இலங்கையில் ஒருவர் க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் பயில வேண்டுமாயின் அவர் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் விஞ்ஞான பாடத்திற்கு திறமைச் சித்தியும் கணிதத்திற்கு சாதாரண சித்தி உட்பட ஆறுபாடங்களில் சித்திடைந்திருத்தல் வேண்டும். இவ்வாறே ஒருவர் பௌதீக விஞ்ஞானத் துறையில் கல்வி கற்க வேண்டுமாயின் அவர் சாதாரண தரத்தில் கணித பாடத்தில் திறமைச் சித்தியும் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியும் உட்பட ஆறு பாடங்களில் சித்திடைய வேண்டும்.
தீவகக் கல்விக் கோட்டத்தில் இருந்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்குத் தோற்றியோரில் உயர் தர வகுப்புக்களில் கணித. விஞ்ஞான பாடங்களைக் கற்பதற்கு தகுதி பெற்றோரின் சதவீதமானது 15, 22 ஆகக் காணப்படுகின்றது. இந்த நிலையானது திருப்தியற்றதாக உள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியுள்ளது. உயர் வகுப்புக்களில் கணித விஞ்ஞானக் கல்வியைக் கற்றவர்களுக்குரிய வேலை வாய்ப்பு வீதமானது கலைத்துறையில் கற்றவர்களை விடத் திருப்திகரமாக அமைந்துள்ளமை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் உயர் தர வகுப்புக்களில் கணித. விஞ்ஞான பாடங்களைக் கற்பதற்கு தகுதி பெற்றோரின் சதவீதமானது இவ்விரு ஆண்டுகளிலும் 15 இலிருந்து 22 ஆக அதிகரித்துள்ளமை மேலுள்ள அட்டவணை 2 இல் காட்டப்பட்டள்ளது. இது தீவகப் பகுதியில் மாணவரின் கணித விஞ்ஞானப் பாடங்களின் பெறுபேறுகள் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்துளளமையைக் காட்டுகின்றது.
5.3.1 கோட்ட ரீதியாக மாணவர் பெறுபேறுகள்
தீவகத்திலுள்ள நான்கு கல்விக் கோட்டங்களிலுமிருந்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் க.பொ.த.(உ.த.) கற்கக் தகைமை பெற்றோரின் விபரம் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 5 உயர்தரம் கற்கத் தகுதியானோர்
ஆண்டு | விபரம் | நெடுந்தீவு | ஊர்காவற்றுறை | வேலணை | காரைநகர் |
2014 | தோற்றியோர் | 56 | 150 | 364 | 100 |
தகுதிபெற்றோர் எண்ணிக்கை | 14 | 56 | 80 | 45 | |
தகுதிபெற்றோர் சதவீதம் | 25 | 37.3 | 30.3 | 45 | |
2015 | தோற்றியோர் | 52 | 172 | 337 | 151 |
தகுதிபெற்றோர் எண்ணிக்கை | 14 | 64 | 100 | 64 | |
தகுதிபெற்றோர் சதவீதம் | 26.9 | 37.2 | 29.7 | 42.4 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
2014 ஆம் ஆண்டில் தீவக வலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றியோரில் வேலணை கல்விக் கோட்டத்தில் கூடுதலானோர் சித்தியடைந்தள்ளனர். வேலணையில் இருந்து தோற்றிய 364 மாணவருள் 80 பேர் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். தீவக வலயத்தில் உள்ள மற்றைய கல்விக் கோட்டங்களான ஊர்காவற்துறைக் கல்விக் கோட்டத்தில் 56 பேரும் காரைநகர் கல்விக் கோட்டத்தில் 45 பேரும் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் 14 பேரும் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். சதவீத அடிப்படையில் எடுத்து நோக்கும்போது காரைநகர்க் கோட்டத்தில் 45 சதவீதமானோரும், ஊர்காவற்றுறைக் கோட்டத்தில் 37.3 சதவீதமானோரும் வேலணைக் கோட்டத்தில் 30.3 சதவீதமானோரும் நெடுந்தீவுக் கோட்டத்தில் 25 சதவீதமானோரும் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி தீவகக் கல்வி வயயத்திலுள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளை வெளிக் காட்டுவதை அவதானிக்க முடியும். இவற்றிலும் நெடுந்தீவுக் கல்விக் கோட்டத்தின் பெறுபேறு மிகமோசமானதாக அமைந்துள்ளமை இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.