வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை
1952 ஆம் ஆண்டு தை மாதம் தைப்பூசத் திருநாளில் தற்போது பாடசாலை அமைந்துள்ள அதே காணியில் தற்காலிக கொட்டகையில் வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என நாமம் சூட்டப்பட்டு, திரு.சி.சதாசிவம்பிள்ளை தலைமையில் சைவ வித்தியா விருத்திச்சங்க முகாமையாளர் திரு. இராசரத் தினம் அவர்களால் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் குறைந்த மாணவர்களுடன் பாலர் கீழ்ப்பிரிவு தொடக்கம் நான்காம் தரம் வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. பாடசாலையின் அதிபராக கோப்பாயைச் சேர்ந்த திரு.வல்லிபுரம் அவர்களும் ஆசிரியராக திரு.இராசரத்தினம் அவர்களும் செல்வி.யோகம்மா ஆறுமுகம் அவர்களும் நியமிக்கப்பட்டு இவ்வாசிரியர் களின் கடின உழைப்பினால் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக நடைபெற்றன.
வெளியூர் ஆசிரியர்களான திரு.வல்லிபுரம், திரு.இராசரத்தினம் ஆகியோர் தங்குவதற்கு இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியரும், சமூக சேவகருமான திரு. ஐ.பொன்னையா தமது வீட்டில் இடம் கொடுத்து உதவினார். இக்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையாக இருந்தமையால் அயலவரும் திரு.இ.கைலாசபிள்ளையின் உறவினருமான திருமதி. பராசக்தி இராசகோபால் தொண்டராசிரியராக சிலகாலம் பணிபுரிந்து பாடசாலைச் செயற்பாடுகளுக்கு உதவினார். ஒரு வருடம் பாடசாலை சிறப்பாக நடைபெற்றது. இக்காலத்தில் பாடசாலைக்கான நிரந்தரக் கட்டடமும் கட்டப்பட்டது.
1953 ஆம் ஆண்டு திரு.வல்லிபுரம், திரு.இராசரத்தினம் ஆகியோர் இடமாற்றம் பெற்றுச்செல்ல, நயினா தீவைச் சேர்ந்த திரு.ஓ.தில்லையம்பலம் அதிபராகவும், பருத்தித்துறையைச் சேர்ந்த பண்டிதர் கனகசபாபதி, சரசாலையைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களும் சிலகாலம் ஆசிரியர் திரு.ஐ.பொன்னையா அவர்களின் வீட்டிலேயே தங்கி இருந்தனர். பாடசாலைக் கட்டடம் பூர்த்தியானதும் பாடசாலையில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி அங்கு தங்கியிருந்து கற்பித்து வந்தனர். திரு.தில்லையம்பலம் சிறந்த அதிபர். பண்டிதர் கனகசபாபதி துறைபோந்த ஆசிரியர். பண்டிதரின் கற்பித்தல் திறமை பற்றி அறிந்து அயற் கிராமங்களான சரவணை, பள்ளம்புலம், நாவலடிப்புலம், இலந்தைவனம் ஆகிய பகுதிகளில் இருந்தும் பிள்ளைகள் ஆத்திசூடி வித்தியாசாலையை நாடி வந்தனர். இதனால் மாணவர் தொகையும் அதிகரித்தது.
1953 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் ஐந்தாம் தர N.p.T.A பரீட்சைக்குத் தோற்றி அனைவரும் சித்தியடைந்தனர். அவர்களில் மூவர் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தனர். அம் மூவரில் செல்வி.மகேஸ்வரி சோமசுந்தரம் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானார். இப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றவர்களில் முதலில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பெருமை அவரையே சாரும்.