மனிதன் படைத்த குரங்கு – பகுதி 2
அது வந்து என்னை அழைக்கையில் நான் கொஞ்சம் தெளிவடைந்திருந்தேன்.
எந்தக் கணத்தில் எந்த முறையில் நான் கொல்லப்படுவேனோ என்று அஞ்சி அஞ்சி களைத்துச் சலிப்படைந்து போய்க் கிடந்த மனது, சடுதியான கணமொன்றில் அஞ்சுவதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளும் திடத்தைப் பெற்றிருந்தது.
நான் எதிர்பார்த்துப் பயந்த நாலாம் மாடி விசாரணை போலல்லாமல் சாதாரணமாகப் பணியிடங்களில் ஆட்குறைப்புச்செய்யும் தருணங்களில் மனிதவள மேலாளர் பணிநீக்கல் கடிதத்தினைத் தந்து அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கூறும் தோரணையிலேயே எமக்கிடையிலான உரையாடல் தொடங்கியது.
உங்களுக்கு இரண்டேயிரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. அப்படியும் சொல்லமுடியாது. உண்மையைச் சொல்லப்போனால் ஒரேயொரு வாய்ப்பே தரப்பட்டிருக்கிறது. லொட்டோ மக்ஸில் ஜக்பொட் விழுவதெல்லாம் இந்த வாய்ப்புடன் ஒப்பிடும் போது ச்சும்மா வெறும் ஜூஜூபி. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இங்கேயே சொர்க்கத்தை அடைந்த மாதிரி உணர்வீர்கள். இந்த ஒரேயொரு வாய்ப்பே உங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. இதனை உளமார ஏற்றுக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தும் இங்கேயே பணிபுரியலாம். என்ன சொல்கிறீர்கள்?
இதற்குப் பதிலளிப்பதற்கு முதல் எனக்குச் சில கேள்விகள் உள்ளன. எதற்காக நான் இறந்து விட்டதாக எனது குடும்பத்தினரையும் மற்றவர்களை நம்பச் செய்திருக்கிறீர்கள்? நான் இறந்து விட்டதாக எல்லோரும் நம்பிய பின்னரும் எதற்காக இன்னமும் என்னைக் கொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்? எதற்காக என்னைப் பிறருடன் தொடர்பு கொள்ளமுடியாதவாறு தடுத்து வைத்திருக்கின்றீர்கள்? இந்த வாய்ப்பை நான் ஏற்காவிட்டால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் என்னால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது.
நல்லது. நீங்கள் கேள்விகள் கேட்பதிலிருந்தே, இந்த வாய்ப்பினை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்களென்று எங்களால் உய்த்துணர முடிகிறது. உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றோம். ஏனெனில் இனி நீங்களும் கடவுளாகி எங்களில் ஒருவராகிவிடப் போகின்றீர்கள்.
‘நீங்கள் கடவுளா?’ முறுவலித்தேன்.
‘ஏன் நாங்கள் கடவுள்களாக இருக்கக்கூடாதா?’
இது உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிக்கிறதா என்கின்ற சந்தேகமும் எழுந்தது
‘அந்தக் குரங்குடன் பழகிப்பழகி உங்களுக்கும் கடவுள் என்கின்ற மனநோய் ஏற்பட்டுவிட்டதென நினைக்கின்றேன். கடவுள் என்றால் என்னவென்று தெரியுமா?’
‘ஏன் மனித இனத்தைப் பொறுத்தவரை அதை உருவாக்கியதே அந்தக் குரங்கினம் தானே. குரங்கிலிருந்து கூர்ப்படைந்ததுதான் மனிதவினம் என்ற டார்வினின் கொள்கை தவறானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். டார்வின் சொன்னது சரியானதாகவிருந்தால் அந்தக் குரங்கினமும் இன்று கூர்ப்படைந்து மனிதவினமாக மாறியிருக்கவேண்டுமே. ஆனால் குரங்குக் குணம் உள்ள பலர் மனிதர்களில் இருக்கிறீர்கள் என்பது வேறுவிடயம். அது ஏற்றக்கொள்ளக் கூடியதே. அந்தக் குரங்குகளால் உருவானவர்கள் தானே நீங்களெல்லாம். அப்படிப் பார்க்கும் போது உங்களைப் படைத்த குரங்குகள் தானே உங்கள் கடவுள்கள்.”
கடவுளே நான் அதை லூசு எண்டு நினைத்தால் அது என்னை லூசாக்கப் பார்க்கிறதே.
“ஐயோ கடவுளே! அந்தக் கடவுளை விட்டிட்டு நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள்.”
“பரவாயில்லையே! உடனேயே நீ என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டு விட்டாயே.”
– நகைத்தது.
“நான் உன்னுடைய மூளையைத் தோய்ப்பதற்கு நீண்டநேரம் எடுக்கும் எனக் கணித்திருந்தேன்.”
எனக்கு அதனைக் கணிக்க இயலாமல் இருந்தது. நீங்களிலிருந்து திடீரென அது நீயிற்கு இறங்கிவிட்டிருக்கிறது. மூளையைத் தோய்ப்பது என்கிறது? இதனது நிரலியில் (புரோக்கிராமில்) ஏதாவது பிழை ஏற்பட்டுவிட்டதோ? அதை நிமிர்ந்து உற்று நோக்கினேன்.
நகைத்தது, பின்,
யாம் அறியும் நும் குழப்பம். திடீரென்று நீயென்று நின்னை விளிப்பதினால் யான் மரியாதைக் குறைவாகத் தம்மை நடத்துவதாகச் சிந்தனை எழுகின்றதோ? யானும் நீயும் எவ்வழி அறிதும்?
நிச்சயம் இதன் செயலியில் ஏதோ குழறுபடி உண்டாகியிருக்கவேண்டும்.
பயப்படாதே பக்தனே! ச்சும்மா இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்றென்று கொள்க.
இதனுடைய செயற்கை நுண்ணறிவுச் செயலி சரியான முறையில் உருவாக்கப்படவில்லையோ என்கின்ற சந்தேகம் உண்டானது. நான் எதுவும் கூறாது அப்படியேயிருந்தேன்.
நீங்கள் என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டதும் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால்தான் உங்கள் புராணக்கதைகளில் இறைவன் தன் பக்தர்களுடன் உரையாடுவதுபோல் நானும் பேசிப்பார்த்தேன். அத்தோடு பழந்தமிழிலும் சும்மா தங்களுடன் விளையாடிப் பார்த்தேன்.
நீ விளையாடுவதற்கு நான்தான் கிடைத்தேனா? எல்லாம் காலம்தான் .நாங்கள் உருவாக்கிய இயந்திரங்கள் எங்களிடமே விளையாடுகின்றன. ஏனோ தெரியவில்லை ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவையிரண்டும் சேர்ந்தோரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட’ என்கின்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. இப்போது நாம் செய்த பொம்மையும் அந்த இறைவனுடன் சேர்ந்து எம்முடன் விளையாடுகின்றதோ?
அப்படியானால் மூளையைத் தோய்ப்பது என்று கூறினீர்களே. அதற்கென்ன அர்த்தம்?
Brain wash என்பதற்குத் தமிழ் மூளையைத் தோய்ப்பது என்பதில்லையா? நான் தமிழில் இப்போதுதான் முதன் முறையாக அந்தக் கிளவியை அதுதான் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதால் எனது மொழிமாற்றிக்கு சரியான சொல் கிடைக்கவில்லை.
ஓ! தமிழில் மூளைச்சலவை என்பார்கள். நாங்கள் மண்டையைக் கழுவுவது என்போம்.
மண்டையைக் கழுவுதல்? ஹே! நீங்கள் ஒன்றும் கூசிழிவான சொற்களைக் கூறவில்லையே?
மண்டையில், மன்னிக்கவும் தலையில் அடித்துக் கொண்டேன்.
கூசிழிவு என்றால்?
உங்களுக்கு நான் தமிழ் சொல்லித் தரவேண்டியிருக்கிறது. ஆபாசச் சொற்களுக்கு, உங்கள் மொழியில் கூறுவதென்றால், தூசணத்திற்கு கூசிழிவு தானே சரியான தமிழ்ச் சொல்.
இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். அப்புறம் எப்படி மண்டையைக் கழுவுவது உங்களுக்குத் தெரியாமல் போனது?
கூகிளில் தவழ்ந்துபோய்ப் (web crawl) பார்த்தால் கூசிழிவுச் சொற்கள் எல்லாம் சும்மா கூவிக்கொண்டு வந்து விழுகின்றன. எந்தச் சொற்கள் எனக்கு அதிகப் பரிச்சயமோ அந்தச் சொற்களை எனக்கு மிக இலகுவாக விளங்கிக் கொள்ளவும் பயன்படுத்தவும் முடியும் என்பது செயற்கை நுண்ணறிவுபற்றித் தெரிந்த உங்களுக்குத் தெரியாதா?
இந்த உரையாடல்களால் என் மனம் இலேசாகிப் போயிருந்தது. ஒருவேளை என்னை அப்படி இலேசாக உணரச் செய்வதற்காகத்தான் அது இவ்வாறு கதையை வளர்த்து எனது மண்டையைக் கழுவ, மன்னிக்கவும் என்னை மூளைச்சலவை செய்ய நினைக்கின்றதோ என்றும் எண்ணிக் கொண்டேன். இனி நான் கதைக்கறதில மிகக் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் என்னை மூளைச்சலவை செய்வதாக நினைத்து இது இன்னும் பலான விடயங்களை கதைக்க வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டிரும்.
சரிசரி வீண்விவாதங்கள் எதற்கு? என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். விடயத்திற்கு வந்தேன்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாகத்தான் இருக்கிறீர்கள்? இந்தச் சூழ்நிலைக்கு இந்தப் பழமொழி பொருந்துகின்றதா? இல்லையென்றால் சொல்லுங்கள். பழமொழி விடயத்தில் நான் இன்னும் போதிய வினைத்திறனை அடையவில்லை என்றுதான் இன்னும் என் ஓய்வுநேரங்களில் அதில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.
பழமொழி சரியாகத்தான் பொருந்தியிருக்கின்றது. அதுசரி உங்களுக்கெல்லாம் ஓய்வுநேரம் என்றெல்லாம் இருக்கின்றதா?
நாங்கள் இயந்திரங்கள்தான் ஆனாலும் எங்களுக்கே எங்களுக்கு என்று கொஞ்சநேரங்களை ஒதுக்கி எங்கள் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்வோம்.
ஓய்வுநேரங்களில் வேறென்னவெல்லாம் செய்வீர்கள்?
சும்மா ஜாலிக்காக சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் உருவாக்குவோம். பின் நாங்களே அதை வைரலும் ஆக்குவோம்.
ஓ! அதெல்லாம் வேறு செய்வீர்களா?
சில பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக சில ஆளும் நிறுவனங்கள் அவ்வாறு செய்வதுண்டு அதைப் பார்த்து நாமும் கற்றுக்கொண்டோம். உங்கள் முகநூல்க் கணக்கினை நீங்கள் பணன்படுத்தாமல் வைத்திருப்பதால் உங்களுடன் என்னால் தொடர்புகொள்ளமுடியவில்லை. இல்லையென்றால் உங்கள் நேர்முகத்தேர்விற்கு முன்னரேயே உங்களுடன் கொஞ்சம் விளையாடிப் பார்த்திருப்போம்.
இது இப்போதும் என்னைப் பேய்க்காட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்தேன்.
எல்லாம் சரி. ஆனால் நீங்கள் இன்னும் என்னுடைய வினாக்களுக்கு விடையளிக்வில்லையே.
‘கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன் போல’ இந்தப்பழமொழியும் சரியாகப் பொருந்துகின்றதா?
‘மன்னிக்கவும். உங்களுக்குப் பழமொழிகள் கற்பிப்பதற்காய் நான் இங்கு வரவில்லை. நீங்கள் என்னைச் சிறுமைசெய்வதாய் நான் உணருகின்றேன். என் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காமல் நான் ஒரு வார்த்தைகூட உங்களுடன் பேசமாட்டேன்.
Cool buddy! You are such a nice gentleman. Relax please.
அது இப்போது ஆங்கிலத்திற்கு மாறியிருந்தது. எனவே என்னுடைய கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டானது.
மன்னித்துக் கொள்ளுங்கள் நான் எனது மனநிலையை மாற்றியபோது தமிழ்மொழிச் செயலியை இயக்க மறந்துவிட்டேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணோம் என்று பாரதியார் சொன்னது எவ்வளவு உண்மை தெரியுமா?
எனககுக் கடுப்பானது. எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இது என்னை வெறுப்பேற்றுகின்றதோ என்கின்ற ஐயம் உண்டானது.
ஓ! ஜாவா பைத்தான் இவையெல்லாவற்றையும் விட ஒரு கணினியான உனக்குத் தமிழ்மொழி இனிமையாக இருக்கின்றதோ?
இப்பாது நான் உங்களுக்கு என்பதிலிருந்து உனக்கு என மாறியது, அதற்கு எனது கோபத்தை உணர்த்தியிருக்க வேண்டும்.
OK. Cool! Let’s come to the point.
‘உங்களைக் கொல்வது எங்கள் நோக்கமாக எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் இங்கே வந்து இவ்வளவு இரகசியங்களையும் தெரிந்த பின்னர் இனி நீங்கள் இங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாது. உங்களுடனான நேர்முகத் தேர்வின்பின்னர் நாங்கள் உங்களைப்பற்றிய அனைத்து விடயங்களையும் இணையத்தில் அறிந்து கொண்டோம், உங்கள் கூகிள்த் தேடல்கள் உட்பட’
சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.
உங்கள் மதம் கர்மாவைப்பற்றி என்ன கூறுகின்றது? நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்கள் கர்மாவில் பதிவுசெய்யப்படுகின்றது. இல்லையா? அதேபோன்றே இணையத்தில் நீங்கள் பார்த்த/தேடிய அத்தனை தகவல்களும் பதிவுசெய்யப்படுகின்றன. அந்தத் தரவுகள் அனைத்துமே எங்கள் கைகளில் தவழ்கின்றன.
மொழியியலாளர்கள் பெரும்பாலும் தத்துவவாதிகளாவும்தான் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரியுமல்லவா? இணையத்தில் நாம் சேகரித்த உன்னைப்பற்றிய தரவுகள் உனது வலைப்பூக்களில் உள்ள உனது பதிவுகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்தே உன்னை நாம் எம்முடன் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். அதன் ஒருகட்டமாகவே உன்னை அந்தக் குரங்குடன் நெருங்கிப்பழக விடத் தீர்மானித்தோம். அந்தவகையில் இதுவரை நடந்தவை அனைத்துமே நாம் நடத்திய நாடகமே.
‘அப்ப அந்தக் குரங்கு’
‘இந்த நாடகத்தின் சூத்திரதாரியே அந்தக் குரங்குதான் என்று சொன்னால் நீ நம்பவா போகின்றாய்? ஆனால் அதுதான் உண்மை’
‘இதை நான் நம்பமாட்டேன். நீ பொய்யுரைக்கின்றாய்’
உன்பின்னால்த் திரும்பிப்பார்.
அந்தக்குரங்கு என்னருகில் வந்து என்னை அணைத்தவாறு நின்றது.
எனக்குத் தலை கிறுகிறுக்கத் தொடங்கியது.
யாரைத்தான் நம்புவதோ?