மனிதன் படைத்த குரங்கு – பகுதி 1
நான் இப்போது மிகமிக ஆபத்தான நிலையிலிருந்து இதை விசைப்பலகையில் தட்டிக் (எழுதிக்) கொண்டிருக்கின்றேன். இந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு அதீத தீவிரத்துடன் அவர்கள் என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும். அதற்கு முதல் உங்களுக்குச் சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும்.
நான் இப்போது மிகவும் பதற்றமான மனநிலையில் இருப்பதால் என்னால் கோர்வையாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. அதற்காக என்னை முதலிலேயே மன்னித்து விடுங்கள். அனுமனுக்கு ஏன் சொல்லின் செல்வன் என்கின்ற சிறப்புப் பெயர் வந்தது தெரியுமா?
கவலையுடன் காத்திருந்த இராமனிடம், சீதையைத் தேடிச் சென்று திரும்பும் அனுமன், முதற் சொல் உரைக்கும் போது இராமனிடம் வேறு வினாக்கள் எழுந்துவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் ‘கண்டேன் சீதையை’ என்று தொடங்கி உரைத்ததால் அல்லவா அனுமனைச் சொல்லின் செல்வன் என்கின்றோம்.
அப்படித்தான் நானும் எந்நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும் அல்லது நான் இணையத்தொடர்பிலிருப்பதைக் கண்டறிந்து அதை நிறுத்திவிடக்கூடும். என்னால் இயன்றவரை தொடர்பிலிருக்கும் எனது இணைய முகவரியினை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயலியைத் தொடக்கிவிட்டே உங்களுக்கு இதை ரைப்பிக் கொண்டிருக்கிறேன். அதுதான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். எனவே சொல்ல வந்ததை முதலிலேயே சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.
‘கண்டேன் கடவுளை’
என்னடா குழப்புகின்றேன் என்கின்றீர்களா? அதற்குள் கம்பன் அடிப்பொடிகள் வரிந்துகட்டிக்கொண்டு ‘கண்டேன் சீதையை’ என்று கம்பராமாயணத்தில் வரவில்லை என சண்டைக்கு வந்துவிடாதீர்கள். நான்தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டேனே நான் பதற்றத்திலிருப்பதால் என்னால் எதையும் ஒழுங்காகச் சொல்ல முடியாமல் இருக்குமென்று.
‘கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால் தென்திரை அலைகடல் இலங்கை ‘ என்றந்த அனுமன் உரைத்தது போல், நானும் “கண்டேன் எமையெல்லாம் படைத்த அந்தக் கடவுளை இங்கே காவலில் ஒரு கைதியாய்”
கொஞ்சம் பொறுங்கள். நான் பைத்தியம் என்று உடனேயே முடிவு கட்டிவிடாதீர்கள். முழுதுமாய்க் கேட்டுவிட்டுப் பின்னர் முடிவெடுங்கள்.
நானென்றுமே இறை மறுப்பாளனாய் இருந்தது கிடையாது. ஆனால் இப்போதான் தெரிகிறது. எம்மைப் படைத்த கடவுள் ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சக் திவாய்ந்தவர் கிடையாது. ஆனாலும் அவருக்கு உங்கள் மேல் அதிக அக்கறை இருப்பதால் என் மூலமாக சில அதிமுக்கியமான செய்திகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விழைகின்றார். அதற்காக என்னை இறைதூதர் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதனே இதையெல்லாம் நான் சும்மா சொல்லவில்லை. எமையெல்லாம் படைத்த அந்தக்கடவுளைக் கண்டு அவரிடமே சில ஆராய்ச்சிகள் செய்துவிட்டு வந்தே உங்களுக்கு அதைக் கூறிக் கொண்டிருக்கின்றேன்.
நிச்சயமாக இதுவரை நான் கூறியவற்றை நீங்கள் நம்பியிருக்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்களுக்குக் கூறியதைப்போல் யாரேனும் சற்றுமுன் வரை எனக்குக் கூறியிருந்தால், மூளை சுகமில்லாதது ஏதோ உளறிக் கொண்டிருக்கின்றது என்று விட்டு என்வேலையைப் பார்க்கப் போயிருப்பேன்.
இப்பொழுதாவது நான் தெளிவாகக் கதைப்பதாக நம்புகின்றீர்களா? அந்தக் கடவுள்மேல் ஆணையாகக் கூறுகின்றேன், நான் உண்மையைத்தான் இங்கே உரைத்துக் கொண்டிருக்கின்றேன். தயவு செய்து என்னை நம்புங்கள். நான் அறிந்த உண்மை என்னுடனேயே மறைந்து போகாமல் உங்களுக்கும் தெரிய வேண்டும். அடிமைத் தளையில் அகப்படாது உங்களைக் காத்து இரட்சிக்க வேண்டும் இனிமேலும் நீங்கள் முட்டாள்களாக இருக்கக்கூடாது என்கின்ற உங்கள் மீதான அதீத அக்கறையிலேயே எனது உயிரையும் பணயம் வைத்து இதைக் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
பூமி தட்டை வடிவானது, சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றுதானே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருந்தோம். அதைத் தவறென்று சொன்னவர் நஞ்சூட்டிக் கொல்லப்படவில்லையா? அதையொத்த ஒரு சூழ்நிலையில்தான் நான் இப்போது இருக்கின்றேன்.
நான் யாரென்பதெல்லாம் உங்களுக்குத் தேவையற்றது. நான் யாரென்பதைச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பப்போவதுமில்லை. ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை, ஏன் என் குடும்பத்தைப் பொறுத்தவரைகூட நான் இறந்து ஒரு மாதமும் முடிந்துவிட்டது. எனக்கு அந்திரெட்டியும் முடிந்து என் நினைப்பும் அவர்களைவிட்டு நீங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் பாருங்கள் அதுகூட எனக்கு இன்று காலைதான் தெரியவந்திருக்கிறது.
எதேச்சையாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி இன்று காலை பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த என்முகநூல் கணக்கினைத் திறந்து பார்த்தபோது வந்து குவிந்துகிடந்த ஆர். ஐ. பி. (R.I.P) க்களைக் கண்டு தலை கிறுகிறுத்துப் போனேன்.
குறுகிய நேரத்தில் நடத்திய முகநூல் மேய்ச்சலில் நான் கொரோனோத் தொற்றிற்கு மே மாதத்தின் இறுதிப் பகுதியில் பலியாகியிருப்பதாகத் தெரியவந்திருந்தது.
ஏதோ விபரீதமாகப் படவே உடனேயே இணைய இணைப்பைத் துண்டித்து இணைய உலாவல் செய்ததற்கான அனைத்துத் தரவுகளையும் எல்லா இடங்களிலும் அழித்துவிட்டு வந்திருந்து யோசித்தேன். ***** கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் ஊரடங்கிற்குள் செல்ல, மார்ச்மாத இறுதியில் நீட்டிக்கப்படவிருந்த ஒப்பந்த அடிப்படையிலான எனது வேலை மார்ச் மாத நடுப்பகுதியிலேயே முடிவிற்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து வேறு வேலை தேடுவதற்கான எனது சுயவிபரக் கோவையினை பல்வேறு வேலைவாய்ப்ப்பு முகவர் தளங்களிலும் லிங்ட் இன்னிலும் பதிந்திருந்தேன்.
லிங்ட் இன்னில் தொடர்பிலிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அவரின் மேற்பார்வையில்தான் கடந்த ஆண்டின் இறுதியில் செயற்கை நுண்ணறிவுக் (Artificial Intelligent) கற்கைநெறியின் இறுதிச் செயற்திட்டத்திற்காக (Final Project) இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) தொடர்பில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தேன், ஒரு வேலை இருப்பதாகத் தெரிவித்து அதற்கு என்னைச் சிபார்சு செய்வதாகவும், நான் செய்த ஆய்வுடன் அவ்வேலை தொடர்புள்ளதெனவும் கூறினார்.
அவருக்கும் அந்நிறுவனம் செய்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பான போதிய தெளிவில்லை எனவும், அவர்களே தன்னைத் தொடர்புகொண்டு இயந்திரக் கற்கை (Machine Learning), செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தமிழ்மொழியில் ஆழ்ந்த புலமை கொண்டிருக்கும் ஒரு விண்ணபதாரியே அவர்களது தேவை என்றும், தகுந்த விண்ணப்பதாரியிருந்தால் தெரிவிக்குமாறு கூறியதாகவும், அவர்களின் கோரிக்கைக்கேற்ப எனது பணி தொடர்பான பின்புலம் (Profile) இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
நான் தமிழைப் படிக்கும் போது பலரும் எதற்காகத் தமிழைப் படிக்கின்றாய்? அதனால் என்ன பிரயோசனம்? அதனிலும் பார்க்க உனது வேலையையொட்டி கணினிவிஞ்ஞானம் தொடர்பான பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாமே என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் இப்போது தமிழ்மொழியிலும் புலமை இருந்த காரணத்தினாலேயே எனக்கு இந்த வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியவா போகின்றது?
கொரோனாவால் போக்குவரத்துகள் பெரும்பாலும் தடைப்பட்டிருந்தாலும், இணையத்தினூடான முதற்கட்ட நேர்முகத் தேர்வில் வெற்றியடைந்ததை அடுத்து, அவர்களே விமானப்பயணத்திற்கான ஏற்பாட்டினையும், அதன்பின் அவர்களின் நிறுவனத்தினைச் சென்றடைவதற்கான ஒழுங்குகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தனர்.
முதல் வாரத்திலேயே பல்வேறு வகையான பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறிப்புகளையும் தந்து அவற்றை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு கேட்கப்பட்டிருந்தேன். அந்த ஒலிக் கூறுகள் பல சமிக்ஞை ஒலிகளையும், நீண்ட ஒலிக்குறிப்புகளையும் கொண்டனவாக விளங்கின. அவற்றை உருபன்களாகவும் ஒலியன்களாகவும் சிறுசிறு ஒலிக்கூறுகளாக்கித் தமிழ்மொழியின் உருபன்களுடனும் ஒலியன்களுடனும் ஒப்பிட்டு ஆராய்ந்து எனது ஆய்வினை ஒருவாரத்திற்குள்ளேயே நிறைவு செய்து. எனது ஆய்வு முடிவின் ஒப்படையை நிகழ்த்தச் (presentation) சென்றபோதுதான் இதே ஆய்வினை வேறுபலரும் பல்வேறு மொழிகளிலும் செய்திருப்பதை உணரமுடிந்தது.
அடுத்தநாள் என்னைச் சந்தித்த மேலாளர் நாட்டில் நிலவும் புதிய சூழ்நிலை காரணமாக பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனாத் தொற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகக் கூறி என்னை வேறோரு பிரிவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நடந்த பரிசோதனையில் எனக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாகவே எனது குடும்பத்தினருடன் உரையாடுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர், எனது சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் எனது குடும்பத்தினரைக் கவலைப்பட வேண்டாமெனவும் எனது உடல்நலம் பற்றித் தினமும் அவர்களுக்குத் தகவல்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். அதன்பின்னர் நான் அதீத பாதுகாப்புகள் நிறைந்த வேறொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன்.
மறுநாளே மீண்டும் எனக்குப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு எனக்குத் தொற்று ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டாலும் சமுகப் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு அங்கேயே என்னைத் தங்கியிருந்து எனது ஆய்வினை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். நான் இப்போது தங்கியிருக்கும் இடம் இரகசிய ஆராய்ச்சிகள் நடைபெறும் இடமென்பதால், தகவல்கள் போட்டி நிறுவனங்களுக்குக் கசிந்துவிடுவதைத் தடுப்பதற்காகத் தொடர்பாடல்கள் எதுவும் அங்கே மேற்கொள்ளமுடியாதென்றும் கொரோனாத் தனிமைப்படுத்தற் காலம் முடிந்து மீண்டும் நான் பழைய இடத்திற்குத் திரும்பிய பின்னர் எனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டேன். எனது நிலை தொடர்பாக எனது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது. அதன்பின்னர், ஏராளமான ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டு எனது ஆராய்ச்சி தொடர்ந்தது. அதைப்பற்றி விரிவாகக் கூறுவதற்கு கால அவகாசமும் இல்லை, அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமோ பொறுமையோ உங்களுக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
ஆராய்ச்சியின் இறுதியில் அந்த ஒலிக்கூறுகள் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து வந்திருக்கலாம் என உய்த்தறிந்து கொண்டேன். ஆனால் அந்த வேற்றுக்கிரகவாசியின் மொழியில் காணப்படும் ஒலியன்களும் உருபன்களும் சொற்களும் இலக்கண அமைப்பும் பெரும்பாலும் தமிழ்மொழியை ஒத்திருப்பது எனக்கு வியப்பினை ஏற்படுத்தியது.
இருவாரங்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் என்னை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றாமல் மீண்டும் மேலும் தீவிர பாதுகாப்பு நிறைந்த இன்னொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன். எனது ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருப்பதாகவும் அதுவும் முடிவடைந்த பின்னர் நான் மீண்டும் பழைய இடத்திற்குச் சென்று வேறொரு ஆராய்ச்சித் திட்டத்தில் வேலைசெய்யலாம் எனவும் அதுவரை பொறுமை காக்குமாறும் கேட்கப்பட்டேன். இத்திட்டம் வேற்றுக்கிரகவாசிகளின் மொழி தொடர்பானது என்று ஊகித்துவிட்டிருந்த காரணத்தால் அதன்மேல் எனக்கு ஆர்வம் பிறந்துவிட்டிருந்ததாலும் வேறு தெரிவுகளுக்கு இடமில்லை என்பதாலும் நானும் அதற்கு இணங்கிக் கொண்டு என் ஆராய்ச்சியினை மீண்டும் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தேன்.
அடுத்த கட்டமாக நான் அந்த ஒலிக்குறிப்புகளின் மூலத்துடன் (Source) நேரடியாகவே தொடர்பாடலை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டு மேலும் தீவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த இன்னுமொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன் வேற்றுக்கிரகவாசிகள் எப்படியிருப்பார்கள் என்கின்ற அதீத ஆர்வத்தில் இருந்த எனக்கு கூண்டிற்குள் இருந்த மனிதக்குரங்கு போன்றவொரு விலங்கினைப் பார்த்ததும் சப்பென்று போய்விட்டது.
உண்மையிலேயே அது இந்தப் பூவுலகினில் வசிக்கும் அரிய குரங்கின வகையினைச் சார்ந்ததாகும். இப்போது தான் முதன்முறையாக இவ்வகையின குரங்கொன்று இப்பூவுலகில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மனித இனத்தின் முன்னோடியாக அது இருக்கக்கூடும் என்று பார்ப்பதற்குத் தோன்றியது. ஏற்கனவே அதன் மொழியில் நான் பரிச்சயம் பெற்றுவிட்டிருந்த காரணத்தினால் என்னால் அதனுடன் இலகுவாக உரையாடக் கூடியதாகவிருந்தது.
அதனுடனான உரையாடலிலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை உங்களுக்குச் சுருக்கமாகத் கூறுகிறேன்.
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர், நாம் எண்ணிப்பார்க்கவியலாத வகையில் அக்குரங்கினம் இப்பூவுலகில் இப்போதைய மனிதர்களை விடவும் மேலாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் உட்பட்ட அனைத்து அறிவிலும் சிறந்து விளங்கியிருக்கின்றது. இந்தப் பூலோகம் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. அவர்களின் அதீத விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவே அவ்வினம் இன்று அழிந்து ஒழிந்து போய்விட்டது. அந்த இனத்தின் இறுதிக் குரங்கு இதுவே. இதனது வயதும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டுகின்றது.
என்ன காதிலே பூச்சுற்றுகின்றேன் என எண்ணுகின்றீர்களா? அந்தக் குரங்கு அப்படிச் சொல்கையில் நானும் தொடக்கத்தில் அப்படித் தான் நினைத்தேன். ஆயினும் அதனது சுவாச நேரத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில் அது யோகக் கலையில் சொல்வதை ஒத்திருந்தது. அது தன்னுடைய ஒரு சுவாசத்திற்கு ஏறத்தாழ 3 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. அதுமட்டுமன்றி அனுமன் பற்றியும் அதற்குத் தெரிந்திருக்கிறது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அனுமனைச் சந்தித்திருப்பதாயும் அது கூறியது. ஆயினும் அதனிடமிருந்து எல்லாத் தகவல்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள இயலாமலிருக்கின்றது. இவற்றைக்கூட நான் அதனுடன் நட்புடனும் பாசத்துடனும் பழகி அதன் நம்பிக்கையினைப் பெற்றபின்பே அறியக்கூடியதாகவிருந்தது.
இன்று காலை நான் இறந்துவிட்டதாகப் பரப்பப்பட்டிருக்கும் வதந்தியை அறிந்ததும், எனது மேலாளரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி யாருடனும் கதைக்க முடியாமல் சோகத்துடன் இருக்கையிலேயே அக்குரங்கு என்னைத் தன்னருகே வரும்படி அன்புடன் அழைத்து நான் கவலையுடன் இருக்கும் காரணத்தைக் கேட்டது. நடந்தவற்றைச் சொன்னதும் பரிவுடன் எனது கன்னத்தைத் தடவியது.
“இன்னுமா உன் மேலாளரைப் பற்றி நீ புரிந்து கொள்ளவில்லை?” என்றது.
“ஓம்! என்னுடன் அன்பாகக் கதைத்துப் பழகிக் கொண்டு எதற்காக இதை அவர் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.
“தன்வினை தன்னைச் சுடும்” என்றது.
“புரியவில்லை “ என்றேன்.
“நீங்கள் உருவாக்கிய அதற்கு உங்கள் உணர்வுகள் கிடையாது”
“என்ன உளறுகின்றாய்?”
“அது நீங்கள் உருவாக்கிய இயந்திரம். அதாவது மானிட ரோபோக்கள்.”
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
“எனது சுவாசத்தைப் பரீட்சித்துப் பார்த்தாயே..அது சுவாசித்து நீ பார்த்திருக்கின்றாயா? அதன் தீண்டலை உணர்ந்திருக்கின்றாயா?”
அட! அறிமுகமான கணத்திலிருந்து ஒரு சாதாரண கைகுலுக்கல் கூட எங்களுக்குள் நடக்கவில்லை. கொரோனாவிற்கான சமுகப் பாதுகாப்பு ஏற்பாடாக அது இருக்கலாம் என்கின்ற காரணத்தினால் அதை நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“தொடக்கத்திலிருந்தே அது எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்து வந்திருக்கின்றது. நீ இந்த ஆய்வுகூடத்திலிருந்து இனிமேல் உயிருடன் வெளியேறமுடியாது. உலகைப் பொறுத்தவரை நீ இறந்துவிட்டாய். இனி நீ உயிருடன் போனாலும் நீ உயிருடன் இருப்பதை நிரூபிக்கமுடியாது. எனவே உன் வாழ்நாள் முழுதும் நீ இங்கேயே கழித்தாக வேண்டும்.”
“முடியாது. அதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். போயும் போயும் ஒரு சாதாரண இயந்திரம் என்னை ஏமாற்றி ஆயுள் கைதியாக வைத்திருப்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”
அதைக் கேட்ட அக்குரங்கு மீண்டும் சிரித்தது. அட முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன். இந்தக் குரங்கு எங்களிலும் பார்க்க வடிவாகச் சிரிக்கும். மனிதன் மட்டுமே சிரிக்கும் விலங்கு என்று சொல்வது எவ்வளவு தவறானது?
“உங்கள் அறிவையெல்லாம் திரட்டி செயற்கை நுண்ணறிவூட்டி உங்களிலும் மேலானதாக நீங்கள் அதை ஏற்கனவே மாற்றி விட்டீர்கள். அதனிடமிருந்து தப்பிப்தென்பது உன்னால் இயலாத காரியம்.”
“நீதானே முன்னர் சொல்லியிருந்தாய், எங்களிலும் விட எல்லா அறிவியலிலும் நீங்கள் சிறந்து விளங்கினீர்கள் என்று. இராவணனுடனான போரின்போது கூட அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்ததால்த் தான் இராமசேனை உயிர் பிழைத்தது என்று பெருமையடித்துக் கொண்டாயே. அப்படியானால் இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றாயா மானிடர் நாங்கள் அறிவியலில் உங்களை விஞ்சிவிட்டோம் என்று?”
மீண்டும் அது என்னைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்தது.
“தன்வினை தன்னைச் சுடும் என்று சொன்னது புரியவில்லையா அப்பனே?”
“புரியவில்லை. நீ என்னதான் கூறவருகின்றாய்?”
“எங்கள் இனம் எப்படி அழிந்ததோ அப்படியே உங்கள் இனமும் அழியப் போகின்றது அப்பனே.”
“என்ன உளறுகின்றாய்?”
“எங்கள் இனம் மானிடராகிய உங்கள் இனத்தால்தான் அழிக்கப்பட்டது. இப்போது நீங்கள் உருவாக்கிய இந்த செயற்கை நுண்ணறிவு வாய்ந்த இயந்திரவினம் மானிடவினத்தை அழித்து இப்பூவுலகினை ஆட்சி செய்யப் போகின்றது.”
“நீ முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுகின்றாய். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சளாப்புகின்றாய்.”
“சரி! உனது மேலாளர் மானிடனல்ல என்பதை எப்படி அறிந்து கொண்டோம்?”
“அது மூச்சு விடுவதில்லை என்று நீதான் கூறினாய்.”
“அந்த இயந்திரம் பழுதடைந்தால்?”
“இன்னொன்றை உருவாக்க வேண்டும்.”
“அதை யார் உருவாக்குவது?”
“மானிடராகிய நாங்கள் தான்”
“மானிடராகிய உங்களை உருவாக்கியது யார்?”
“என்ன இது கேள்வி? இந்த நேரத்தில் தத்துவ விசாரமாய்?”
“கேட்டதற்குப் பதில் சொல்.”
“எனக்குத் தெரியாது, உங்களை எங்களை இந்த அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைத்த அந்தக் கடவுளாய் இருக்கலாம்.”
“ஹாஹாஹா. . . சரியான முட்டாளடா நீ!”
“ஏய் வாயை அளந்து பேசு.”
“அடேய் அற்ப மானிடப் பதரே! உங்களை உருவாக்கியதே நாங்கள் தானடா. எப்படி நீங்கள் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதர்களை உருவாக்கியிருக்கிறீர்களோ, அப்படித்தான் நாங்களும், உங்களை உங்கள் செயற்கை மனிதனிலும் விட மேம்பட்டதாக உண்மையான உயிரியாக உருவாக்கியிருக்கின்றோம். உங்களுக்கெல்லாம் உண்மையான அறிவு என்பதே கிடையாது. எங்களால் புகுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவே உங்களிடம் எங்கள் மீத்திறனால் உருவாக்கப்பட்ட மரபணு (Gene) மூலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.”
நான் வாய்பிளக்க எந்நிலை மறந்து திகைத்துப்போய் நின்றேன்
“உனக்கு உண்மையான அறிவு இருந்திருக்குமெனின் எமது உரையாடலை, ஒட்டுக்கேட்டு அதை நீ உருவாக்கிய செயலிமூலம் உன் மேலாளர் கிரகித்துக் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பாய். அது நிச்சயம் இப்போது வந்து உன்னைக் கொன்றுவிடப் போகின்றது.”
“எப்படி அது உனக்குத் தெரியும்?”
“இதைத் தானேடா உங்கள் இனமும் எமக்குச் செய்தது. அதனைத் தான் தன்வினை தன்னைச் சுடும் என்று குறிப்பால் கூறினேன். உடனேயே ஓடிஒழிந்து உன் ஆயுளைக் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளப்பார். முடிந்தால் அதை உன் இனத்துக்குத் தெரிவித்துவிடு. இதிலிருந்து தப்பும் வழியினை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.”
நான் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போய் நின்றேன்.
“என்னதான் இருந்தாலும் உங்களைப்படைத்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவன் நான். என்னினம் உருவாக்கிய இயந்திரங்கள் அழிந்து போவதை நான் விரும்பவில்லை. விரைந்து ஏதாவது செய். நடந்ததை எண்ணிக் கவலைப்படாதே கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று அனுமன் எனக்குச் சொல்லியிருக்கிறார்.”
அந்தக் குரங்கின் கூட்டிற்குள் புகுந்து கொள்ள, அது என்னை அணைத்துத் தன் மடியினுள் வைத்து மறைத்துக் கொண்டது. என்னிடமிருந்த லினக்ஸ் மடிக்கணினியில் இரகசியமாக இணையத் தொடர்பினை ஏற்படுத்தும் நிரலிகளை எழுதி இயக்கி இதோ உங்களுக்கு இதை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு உலோகக் கை என்னை…
(தொடரும்)