வேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்
வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர்
( ஆலய வரலாறும் வளர்ச்சி நிலையும் )
திரு. கோ.பரமானந்தன் ஆசிரியர்
வேலணைப் பிரதேசத்தின் மையப்பகுதியை அண்டிய தற்போதைய வேலணை வடக்கு கிராம சேவகர் பிரிவிலே “இலந்தை வனம்” எனப் பெயர் பெற்ற பதியிலே கோயில் கொண்டு எழுந்தருளி அடியார்களுக்கு அருள்புரியும் வேலணை இலந்தை வனம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதெனக் கருதுவர். தென்னிந்தியாவிலே சீர்காழியைப் பிறப்பிடமாகக் கொண்ட செட்டி வம்சத்தைச் சார்ந்த சிதம்பரநாத முதலியார் என்பவர் இந்நாட்டுக்கு வந்து வேலணையில் இவ்வாலயச் சூழலில் குடியேறி வாழ்ந்தார் என்று பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வருகிறது.
அன்று இப்பகுதி இலந்தை மரங்களால் சூழப்பட்ட காடாக இருந்தமையால் “இலந்தைவனம்” எனும் நாமம் பெற்றது. முதலியார் அவர்கள் அப்பகுதியைத் துப்புரவு செய்த வேளை சிறிய விநாயகர் திருவுருவம் இலந்தை மரத்தின் கீழ் காணப்பட்டதாகவும் அத்திருவுருவத்தை எடுத்து பாதுகாத்து மண்குடிசை ஒன்றை ஸ்தாபித்து அதில் அவ்வுருவை வைத்து வழிபட்டு வந்ததாகவும் அக்காலப் பகுதியிலேயே அவ்விடச் சூழலில் வாழ்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
சிதம்பரநாதமுதலி – பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் விநாயகப் பெருமானைப் பூசித்து வாழ்ந்து வந்தனராயினும் மகப்பேறு இல்லாக் குறையொன்று அவர்களுக்கு இருந்து வந்தது. ஈற்றில் அவர்கள் தமது சொத்துகள் முழுவதையும் ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு எழுத விரும்பி ஆலயத்தைச் சூழவிருந்த (190) நெற்பரப்புக் காணியை சித்தி விநாயகருக்கே தரும சாதனம் செய்து வைத்தனர்.
அதன் பின்பு சித்தி விநாயகரின் அருட்கடாட்சமோ என்னவோ அவ்விருவருக்கும் ஆண் குழந்தையொன்று பிறந்தது. அப்பிள்ளைக்கு வேலாயுதபிள்ளை என நாமம் சூட்டி வளர்த்ததாகவும் சிதம்பரநாத முதலியார் (1ஆம் தலைமுறை) இறையடி சேர அவரின் வாரிசு திரு வேலாயுதபிள்ளை (2ஆம் தலைமுறை) அவர்கள் அவ்வாலயத்தைப் பராமரித்து வந்ததாகவும் அவரது காலத்தில் போர்த்துக்கேயரின் அடாவடித்தனத்திற்கு இவ்வாலயம் ஆட்பட்டபோது திரு வேலாயுதபிள்ளை அவர்கள் விநாயகர் திருவுருவத்தை எடுத்து நெற்கூடை ஒன்றினுள் மறைத்து வைத்துப் பராமரித்துப் பாதுகாத்து வந்ததாகவும், பின்பு அவர் சிறு ஆலயம் ஒன்றை அமைத்து இத்திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இவரின் பின் இவ்வாலயம் இவரின் வழித்தோன்றல்களான சிதம்பரநாதர் (3ஆம் தலைமுறை), வீரகத்திப்பிள்ளை (4ஆம் தலைமுறை), கார்த்திகேசு (5ஆம் தலைமுறை), தம்பாப்பிள்ளை (6ஆம் தலைமுறை) என்போரின் பரிபாலனத்திற்குட் பட்டு வந்துள்ளது. இவர்களில் கார்த்திகேசு என்பவரின் காலத்தில் அதாவது 1930 களில் முலத்தானம், மகா மண்டபம், சபா மண்டபம் என்ற கட்டுமானப் பணிகள் ஈண்ணாம்புக் கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டு குடமுழுக்கும் நடாத்தப்பட்டுள்ளது.