யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04
பருத்தியடைப்பு
பருத்தியடைப்பு என்று இன்று அழைக்கப்படும் இந்த பிரதேசம் வேலணை தீவின் ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த பிரதேசம் ஒரு காலத்தில் தேவன்கணை என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். இதன் அயல்கிராமங்கள், வீரநாராயணன் படைத்தளபதிகளான நாராயணன் வேலன், சரவணன் ஆகியோரின் தானை நின்ற இடம் என்று கூறப்பட்டு படைத்தளபதிகளின் பெயரை முதன்மையாக கொண்டு, நாரந்தனை, வேலணை, சரவணை என அழைக்கபடுவதால் இங்கும் தேவன் எனும் தளபதியின் படை நின்று இருக்கலாம் அதனால் இந்த இடமும் தேவன் கணை என்று அழைக்கபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதற்கு ஒரு ஆதாரமாக இன்று உள்ள தேவன் கணை பிள்ளையார் கோவிலை கூறலாம் .
பருத்தியடைப்பு என்ற பெயர் போர்த்துகேயர்காலதுக்கு பின்னர் வந்ததாகவே கருதப்படுகின்றது. இந்த பெயர் எவ்வாறு வந்தது என்பதை பற்றி பார்ப்போமானால், போர்த்துகேயர் தெற்காசிய நாடுகளை ஆக்கிரமித்த பொழுது பருத்தி ஒரு முக்கிய பணப்பயிர் என்ற உண்மையை உணர்ந்தார்கள். அனேகமாக தமது ஐரோப்பிய நாடுகளில் செம்மறி ஆட்டு கம்பளி உடைகளை பயன்படுத்திய அவர்கள் பருத்தி மூலம் செய்யப்படும் ஆடைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். அதனால் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் நெசவு தொழில்சாலைகளை அமைத்து பருத்தி செடியை பயிருட்டு அந்த பணபயிர் மூலம் பெரும் செல்வம் ஈட்ட முயற்சித்தார்கள். அந்த வகையில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் ஊர்காவற்துறையில் ஒரு நெசவு தொழில்சாலையை அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அந்த நெசவு நிலையத் தேவைக்கான பருத்தி பஞ்சு மூலம் பெறப்பட்ட நூலினை பெற்றுகொள்வதற்காக தங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து பரித்தி செடியை கொண்டு வந்து காவலூருக்கு அண்மையில் இருந்த இந்த கிராமத்தில் பயிரிட்டார்கள்.
அந்த காலத்தில் வேலணை தீவின் சகல கிராம மக்களும் கால் நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாய் இருந்ததால் பருத்தி செடியை கால் நடைகள் தாக்கி உணவாக உண்டு சேதம் விளைவிக்கும் என்பதால் இந்த பெரும் பிரதேச பகுதியை வேலி அடைத்து பாதுகாத்து பருத்தி பயிர் இட்டதால் இந்த இடம் பிற்காலத்தில் பரித்தியடைப்பு என்று பெயர்பெற்றது. இங்கு பருத்தியை பயிரிட்டு அதன் பஞ்சில் இருந்து நூலினை தயாரித்து, பல்வேறு வகையான ஆடைகளை இங்குள்ள தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டி தயாரித்து தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் செல்வம் ஈட்டினார்கள். அத்துடன் ஆழ்கடல் மீன்பிடிக்கான வலைகளையும் வடிவமைத்து கடல் வளங்களையும் சுரண்டி செல்வம் ஈட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பினார்கள்.