பண்டிதர் இ.மருதையனார்
வேலணை மத்திய கல்லூரி நிலைத்து நிற்பதற்கு அரும்பாடுபட்ட ஆசிரியமணி பண்டிதர் இ.மருதையனார்
அன்னாரது ஞாபகார்த்த தினம் ஜனவரி 26ஆம் திகதி ஆகும்
இவரைப் பற்றி சேர். துரைசுவாமியினால் வெளிப்படுத்தப்பட்டவை (02.09.1957)
பண்டிதர் மருதையனார் உபாத்தியாயர் அவர்களின் அயராத முயற்சியால் ஸ்தாபிக்கப்பட்டதே ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள வேலணை அரசினர் மத்திய கல்லூரியாகும். அரசாங்கத்திற்கு யாதொரு செலவுமின்றி வகுப்புக்களை 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து உடனடியாக ஆரம்பிப்பதற்காக தன் சொந்தச் செலவிலேயே தற்காலிக கட்டடங்களையும் தளபாடங்களையும் வழங்கி உதவியவர் மருதையனார் உபாத்தியாயர் ஆவார்.
தற்போதுள்ள அதன் புதிய மாடிக் கட்டடங்களுக்கு மாற்றப்படும் வரை அக்கல்லூரி சுமார் பத்து ஆண்டுகளாக குறித்த கட்டடங்களிலேயே இயங்கிவந்தது. சுருங்கக்கூறின் கல்லூரியின் வெற்றிக்கும் அதிகரித்துக் கொண்டு வரும் அதன் ஆற்றலுக்கும் ஆரம்பத்தில் சில ஆண்டுகளாக பண்டிதர் மருதையனார் அவர்களுடைய அயராத அர்ப்பணிப்பும் சளையாத உழைப்புமே பெருமளவில் காரணமாய் அமைந்தது எனலாம். மேலும் கல்லூரியில் வழிபாட்டறை ஒன்றை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டு கல்வித்திணைக்களத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட ஏழாயிரம் ரூபா ரொக்கப் பணம் அவரது முழுமூச்சான ஈடுபாட்டால் சேகரிக்கப்பட்டதாகும். வேலணை மத்திய கல்லூரியிலிருந்து தோற்றி சிரேஷ்ட பாடசாலைத் தராதரப்பத்திரப் பரீட்சையில் (எஸ்.எஸ்.சி) சித்தியடைந்த முதலாவது தொகுதி மாணவிகளுள் பண்டிதர் மருதையனார் அவர்களுடைய புத்திரி திருமகளும் ஒருவராவார். பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான அம்மாணவியே அக்கல்லூரியின் முதலாவது பழைய மாணவியுமாவார்.
இவரைப் பற்றி இலவசக் கல்வியை இந்நாட்டில் ஏற்படுத்திய கல்வி அமைச்சர் டாக்டர் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கராவின் உரையின் ஒரு பகுதி
கெளரவ மந்திரியார் அவர்கள் வேலணை மத்திய கல்லூரிக் கட்டடத்தை திறந்து வைக்க வந்திருந்த சமயம் மக்கள் கூட்டம் ஜனசமுத்திரமாகக் காட்சியளித்தது. கெளரவ சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகிறது, தமிழ் ஆசிரியர் திரு.இ.மருதையனார் அவர்கள் தமிழில் வரவேற்புரை கூறுகிறார். அம்மகாவித்தியாலயத்தில் அப்பொழுது அதிபராகவிருந்த திரு. ஏ.கந்தையா அவர்கள். அவர்களது பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுகிறார். கூட்டம் அமைதியுடன் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. கெளரவ மந்திரியார் இவர் பேசும்போது இவரையும், அவர் உரை பெயர்க்கையில் அவரையும் மாறிமாறிப் பார்க்கின்றார், கேட்கின்றார். பேச்சுக்களெல்லாம் முடிந்தபின், கெளரவ மந்திரியார் நன்றி கூறும்போது கூறினார். முதலில் வரவேற்புரை கூறியவர் ஒரு தமிழ் ஆசிரியர் அவர் பேச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால் அதிகம் மகிழ்ந்திருப்பேன். ஆங்கிலத்தில் கேட்டே அவரது அறிவாற்றலையும் செயல் திறமையையும் வியந்தேன். இந்தத் தமிழ் ஆசிரியரின் பெற்றோர் ஏழைகளாக இருந்திருப்பார்கள் போல் தெரிகிறது. வசதி படைத்தவர்களாக இருந்திருப்பார்களானால் இவருக்கு ஆங்கிலக் கல்வியும் படிப்பித்திருப்பார்கள். அவருடைய இயற்கை விவேகத்திற்கும், அறிவாற்றலுக்கும் எவ்வளவோ உயர்ந்த பதவிகளைப் பெற்றிருக்கலாம். துரதிஷ்டவசமாக அப்பொழுது இலவசக் கல்விமுறை இருக்கவில்லை என்று இவரை ஆதாரங்காட்டித் தமது இலவசக் கல்விக் கொள்கையை வலியுறுத்தினார்
தொகுப்பு: டி.எம்.ஆர்