யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03
தீவுகள் பிரிந்த காலத்தில் இருந்து 1960 ம் ஆண்டுவரை அனைத்து தீவு மக்களும் ஒன்றாக சங்கமிக்கும் இடமும் தமது யாழ் குடாநாட்டுக்கான பயணமும் காவலூர் துறைமுகம் ஊடாகவே நடைபெற்றது என்று அறியப்படுகின்றது .அன்னியர் ஆட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நீதிமன்றம் பொலீஸ் நிலையம் என்பனவும் அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வைத்திய வசதிகளும் சந்தை வசதிகளும் தீவு பகுதி மக்கள் முக்கியமாக ஒன்றுகூடும் இடம் காவலூராகவே இருந்தது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் வரை அதிக சுங்க வருமானம் பெறும் துறைமுகமாகவும் ,பலருக்கு வேலைவாய்பு அளித்த துறைமுகமாகவும் இங்கிருந்த துறைமுகம் விளங்கியது.
ஆதிகாலத்தில் இருந்தே இங்கு மக்கள் செறிந்து வாழ்ந்த ஊருண்டி என்ற பகுதிக்கு அண்மையில் காவலூரில் போர்த்துக்கேயர் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்தக் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது. இதைவிட பின்வந்த ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கடற்கோட்டை ஹமன்ஹீல் என அழைக்கப்படுகிறது.
இங்கு துறைமுகம் இருந்ததாலும் அன்னியர்கள் போர் வீரர்களாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் இங்கு வருகை அதிகமாக இருந்ததாலும், அந்நியர்களின் கட்டாய கலப்பு கொண்ட மக்கள் குழுமங்களும் இங்கு வாழ்ந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. இங்கு ஆரம்பத்தில் பெரும் நில சொந்தகாரர்களான அம்பலத்தார் வம்சத்தினர், ஐயனார் வம்சத்தினர், மற்றும் முதலியார் வம்சத்தினரும் என பூர்வீக ஆதி சைவ வம்சத்தினர் வாழ்ந்ததாகவும் புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார். இவர் கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறுவி அங்கு மக்களை வழிபாட்டுக்கு அழைத்து துரித மத மாற்றத்துக்கு உள்ளாகினார் என்ற கருத்தும் இருக்கிறது. அன்னியரின் கட்டாய மதம் மாற்றத்துக்கு மக்கள் ஆரம்பத்தில் மறுத்ததால் கட்டாய திருமணங்கள் செய்யவைத்து மதமாற்றம் செய்ததாகவும் வரலாறுகள் இருக்கிறது. போர்த்துகேயருடன் திருமண கலப்பு செய்து பறங்கியர் என்ற பெயர் கொண்டு அழைக்கும் குழும மக்கள் இங்கு கலந்து வாழ்ந்தார்கள் என்றும் குறிப்புக்கள் இருக்கிறது. இதற்கு உதாரணமாக பறங்கி தோட்டம், பறங்கி வளவு போன்ற இடப்பெயர்களை குறிப்பிடலாம்.