நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
எனது மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி. கேதாரநாதன் அவர்கள் தலைமையில் அதிபர் திரு. கிருபாகரன் தொழிலதிபரும் பழைய மாணவருமாகிய திரு. கந்தையா ரவீந்திரன் ஆகியோருடன் அடியேனும் இணைந்து ஒரு குழுவாக இயங்கி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமுள்ள கருணை உள்ளங்கொண்ட பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் திட்டமிட்டபடி இப்பெருங் கைங்கரியத்தை நடாத்தி முடிப்பதற்கு அந்த சிவகாமி சமேத நடராசப்பெருமான் திருவருள் பாலித்தமையை நினைக்கும்போது எனது உடம்பு புல்லரிக்கின்றது. அதுமட்டுமல்ல, இந்தத் திருப்பணி மூலம் ஒரு விடயம் நன்றாகப் புரிகின்றது. நாம் எந்தவொரு செயற்பாட்டையும் தூரநோக்குடனும் தூய எண்ணத்துடனும் மேற்கொள்கின்றபோது எமக்கு மேலானதாகவுள்ள சக்தி எம்மை வழிநடாத்தும். அந்தக் காரியம் எதுவித தடங்கலுமின்றி நிறைவேறும் என்பதாகும். இதற்குத் தலைமைத்துவம் சரியானதொரு வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது அதிபர் திரு. கிருபாகரன் அவர்களது தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்து முடிக்கும் ஆற்றலும் விடாமுயற்சியும் எமது பழைய மாணவர் சமூகத்தின் நம்பிக்கையை மேலும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.
நிறைவாக இத்திருக்கோவிலைக் கட்டிமுடிக்க வேண்டுமென்று ஆரம்பம் முதல் அயராது உழைத்த எங்கள் மதிப்புமிக்க ஆசிரியை திருமதி. வேதவல்லி அரசரட்ணம் அவர்கள் கும்பாபிஷேகத்தன்று முழுமையாகப் பங்குபற்றிச் சிவனருள் பெற்றதோடு மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்திலும் பங்குபற்றி மகிழ்ந்தமை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதரும் விடயமாகும். மேலும் இத்திருப்பணிக்குப் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக அன்னதானம் வழங்கிய முன்னாள் அதிபர் திரு. கு. கணேசலிங்கம் அவர்களின் அரும்பணிக்கும் எமது குழுவின் சார்பில் கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும்.
மதிப்பிற்குரிய பெரியோர்களே! அன்பான மாணவச் செல்வங்களே! நாம் அன்பும் அறமும் சார்ந்தவர்கள். எமது வாழ்க்கை அன்பின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும் இயங்க வேண்டும் என்று உலகத்திற்கே உணர்த்தியவர்கள் நாம். அந்த வழியில் எமது எதிர்காலச் சந்ததியினரும் அன்பும் அறமும் சார்ந்தவர்களாக வாழ இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சிவகாமி சமேத நடராசப் பெருமான் அருள்புரிவாராக.
‘ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்.’
பணிவுடன்
சி.இளஞ்செழியன் (தலைவர்)
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா