நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் (1997-2001) அதிபராகக் கடமையாற்றிய திரு. கு. கணேசலிங்கம் அவர்கள் 1992 இடப்பெயர்வின் பின்னர் 1998 முதல் எமது கல்லூரியை மீண்டும் சொந்தக் கட்டிடங்களில் இயங்க வைத்து 1999 இல் பொன்விழாக்கொண்டாடிய பெருமைக்குரியவர். இன்றும் அறவழியே தன்வழியென்று வாழ்வதோடு கல்லூரியின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் தன்னலமற்ற தொண்டாற்றி வருபவர். இவரது நிர்வாகத்தில் அப்போதய யுத்தச் சூழ்நிலையில் மிகக்குறைவான நிதிவளத்துடன் ஆலயத்தின் முன்மண்டபம் விரிவாக்கப்பட்டுக் கும்பாபிசேகம் நடைபெற்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
மேலும் கல்லூரியின் இடப்பெயர்வு காரணமாகப் போதிய பராமரிப்பு இல்லாமையும் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய புனருத்தாரண வேலைகள் முழுமையாக நடைபெற முடியாமையின் காரணமாக ஆலயத்தின் கட்டிடத்திற்குள் வெடிப்புகள் ஏற்பட்டு கற்பக்கிரகத்துக்குள் ஒழுக்குகள் ஏற்படக் காரணமாகியது. 2011ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்ற மண்ணின் மைந்தன் திரு. சி. கிருபாகரன் அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இக்குறைபாட்டை எப்படியாவது நிவர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தொடர்ந்து உருவாகியதன் பயனாக எமது கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் பிரதி அதிபருமான திருமதி. கேதாரநாதன் அவர்களிடம் தனது வேண்டுகோளை முன்வைத்தார். திருமதி. கேதாரநாதன் அவர்கள் நீண்டகாலமாக இந்த ஆலயத்தின் பரிபாலனத்திற்குத் தேவையான நிதியை ஆலயத்தின் அறங்காவலர் சபையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.