நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
இவரது குணாதிசயங்களை நன்குணர்ந்த எமது கல்லூரியின் பழைய மாணவியும் நீண்டகால ஆசிரியையுமான திருமதி. வேதவல்லி அரசரட்ணம் (முத்தையா ரீச்சர்) அவர்கள் தங்கள் ஆசிரியர் குழுவின் கோயில் திருப்பணி பற்றிய நீண்டகால விருப்பத்தை அதிபரிடம் விளக்கமாக வரலாற்றுக் காரணிகளுடன் எடுத்துரைத்தார். இவர்களது அறஞ்சார்ந்த நோக்கத்தை நன்கு புரிந்துகொண்ட அதிபர் திரு. சிவராஜரட்ணம் அவர்கள் துறைசார்ந்த அறிஞர்களிடமும் பிரதி அதிபர் பண்டிதர் இராசையா, சிரேஸ்ட ஆசிரியர்கள் திரு. ஈ. கே. நாகராசா, திரு. பொ. கேதாரநாதன், திரு. செ. வரதலிங்கம், திருமதி. வேதவல்லி அரசரட்ணம், செல்வி. ஏ. கந்தையா ஆகியோருடன் கலந்துரையாடிய போது இத்திருப்பணிக்கான நிதியுதவியை எவ்வாறு பெறுவது என வினவினார். அதற்குப் பதிலளித்த ஆசிரியர் குழுவினர் தாங்கள் ஒவ்வொருவரும் ரூபா 1000 நன்கொடையாக வழங்குவதென்ற தங்கள் ஏகமனதான முடிவை அறிவித்தபோது அதிபர் மகிழ்ச்சிபொங்க ‘அப்படியானால் இலகுவாகச் சாமியைக் கொண்டுவந்து வைத்துவிடலாம்’ என்று கூறி தனது சம்மதத்தைத் தெரிவித்தபோது கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
“அப்படியானால் இலகுவாகச் சாமியைக் கொண்டுவந்து வைத்துவிடலாம்”
அதிபர் ஆசிரியர்களின் கலந்தாலோசனையின் விளைவாக திரு. பொ. கேதாரநாதன் தலைமையிலான மூவர்கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. மற்றைய இருவரும் திரு. ஈ. கே. நாகராசா மற்றும் திரு செ. வரதலிங்கம் ஆகியோராவர். இந்த மூவரும் கல்லூரிச் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பு மிக்கவர்கள். இவர்களது இடைவிடாத முயற்சியின் பயனாகவும் கல்லூரியின்பால் அக்கறையுள்ள பொதுமக்களின் உதவியுடனும் ஆலயத் திருப்பணி வேலைகள் பூர்த்தியாகின. ஆலயத்தின் முடிக்கான செலவைப் பண்டிதர் மருதையனார் அவர்கள் வழங்கியதாக அறிகின்றேன். தற்போது எழுந்தருளியிருக்கும் சிவகாமி சமேத நடராசர் சிலைகள் திரு. ஈ. கே. நாகராசா அவர்களது நேரடிக் கண்காணிப்பில் யாழ்நகரில் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டுப் பின்னர் உழவு இயந்திரத்தில் வேலணைப் பிரதேசம் முழுவதும் உயர்தர வகுப்பு மாணவர்களால் வீதி உலாக் கொண்டு வரப்பட்டுப் பின்னர் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றமை எமது கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய விடயங்களில் ஒன்றாகும்.